எம்.எல்.ஏ. வீட்டின் முன் தீக்குளித்த நிர்வாகி உயிரிழப்பு.. திமுகவின் அலட்சியத்தால் பரிதாபம்..

மதுரையில் திமுக மாவட்ட செயலாளர் கோ.தளபதியின் வீட்டின் முன்பாக தீக்குளித்த, திமுக நிர்வாகி மானகிரி கணேசன் சிகிச்சைப் பலனின்று உயிரிழந்துள்ளார்.

Aug 30, 2024 - 18:07
 0
எம்.எல்.ஏ. வீட்டின் முன் தீக்குளித்த நிர்வாகி உயிரிழப்பு.. திமுகவின் அலட்சியத்தால் பரிதாபம்..
உயிரை மாய்த்துக்கொள்ளப் போவதாக கடிதம் எழுதி உயிரிழந்த மானகிரி கணேசன்

மதுரை மாநகர ஆவின் திமுக தொழிற்சங்க கௌரவத் தலைவராக பதவி வகித்து வந்தவர் மதுரை மானகிரி பகுதியைச் சேர்ந்த கணேசன். இவர் கடந்த 10 ஆண்டுளுக்கு மேலாக திமுகவில் நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மானகிரி கணேசன் கடந்த ஆண்டு ஜீன் 28ஆம் தேதி மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை முன்பாக தமிழக ஆளுநரை மாற்றக் கோரி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். 

அப்போது, உடல் முழுவதிலும் மண்ணெண்ணெய் ஊற்றியதால் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மானிகிரி பகுதி திமுக வட்ட செயலாளர் 3.5 கோடி ரூபாய் அளவிற்கு திடீரென சம்பாதித்துள்ளதாகவும், தான் ஆளுநருக்கு எதிராக தீக்குளிக்க முயன்று, உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் திமுகவினர் யாரும் சந்தித்து ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை எனவும் புகார் தெரிவித்தார்.

மேலும், தனது புகார் குறித்து நேரடியாக அமைச்சர் மூலமாக விசாரிக்கலாம் எனவும், தனது புகார் கடிதத்திற்கு பதில் கிடைக்கவில்லை என்றால் மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள கருணாநிதி சிலை முன்பாக தீக்குளித்து உயிரை மாய்ப்பேன் என கடிதம் மூலமாக எழுதி மானகிரி கணேசன் திமுக தலைமைக்கும் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் தளபதிக்கும், அமைச்சர்களுக்கும், மேயருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்த கடிதம் அனுப்பி வைத்த நிலையில் அதனை திமுக தலைமையும், மாநகர் மாவட்ட திமுக தலைமையில்  கண்டுகொள்ளாத நிலையில், மதுரை மூலக்கரை பகுதியில் உள்ள மதுரை மாநகர திமுக மாவட்ட செயலாளர் கோ.தளபதியின் வீட்டிற்கு, மானகிரி கணேசன் நேற்று காலை சென்றுள்ளார்.

அப்போது வீட்டிற்கு சென்ற சில நிமிடங்களில் திடீரென வீட்டிற்கு வெளியே நின்றபடி மானகிரி கணேசன் தான் வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதில் 90% தீக்காயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தற்கொலை விவகாரம் தொடர்பாக கணேசனிடம் மதுரை மாவட்ட 6-ஆவது நீதிமன்ற நீதிபதி அவர்கள் நேரில் சென்று வாக்குமூலம் பெற்றார்.

நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி மானகிரி கணேசன் உயிரிழந்த நிலையில், அவரது உடலானது அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக திருப்பரங்குன்றம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாநகர மாவட்ட செயலாளரும் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான கோ.தளபதி திமுக உட்கட்சி தேர்தலின் போது, தனது ஆதரவாளர்களை சென்னைக்கு அழைத்துச் சென்று தனியார் விடுதியில் தங்க வைத்தது, அமைச்சர்களுடன் கோஷ்டி பூசல், கோ.தளபதியின் சகோதரி தன்னை சொத்துக்காக தாக்கியதாக கூறி திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தது என அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கினார்

தற்போது, கோ.தளபதி திமுக நிர்வாகி தற்கொலை விவகாரத்திலும் சிக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளிப்படையான விசாரணையை காவல்துறையினர் நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில் தொடர்ச்சியாக சர்ச்சைக்கு ஆளாகும் திமுக மாவட்ட செயலாளரின் நடவடிக்கைகளை திமுக தலைமை கண்டுகொள்ளாமல் இருப்பதற்கான காரணம் ஏன்? என்ற கேள்வியும் பல்வேறு தரப்பினரிடையே எழுந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow