Murugan Maanadu 2024 : திமுகவை படுத்தும் முருகன் மாநாடு.. எதிர்க்கும் கூட்டணி கட்சிகள்..

Murugan Maanadu 2024 : தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறை சார்பில் நடத்தப்பட்ட முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு, கூட்டணி கட்சிக்குள்ளாகவே வலுத்துள்ள எதிர்ப்பு திமுகவிற்கு குடைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

Aug 26, 2024 - 13:37
Aug 26, 2024 - 14:27
 0
Murugan Maanadu 2024 : திமுகவை படுத்தும் முருகன் மாநாடு.. எதிர்க்கும் கூட்டணி கட்சிகள்..
DMK Suffered For Coalition Parties CPIM, VCK Opposition To Murugan Maanadu 2024

Murugan Maanadu 2024 : அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழனியில் நேற்று முன்தினம் [14-09-24] தொடங்கியது. மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மாநாடு ஆய்வு மலர் வெளியிடப்பட்டது. இந்த மாநாட்டில் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

நிறைவு விழாவில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நினைவாக பழநியில் ‘வேல்’ நிறுவுவது, மொபைல் செயலி மூலம் வழிபாட்டு வசதிகள் செய்து தருவது, சித்த மருத்துவத்தை இனி வரும் காலங்களில் ‘தமிழர் சித்த மருத்துவம்’ என அழைக்க அரசுக்கு பரிந்துரைப்பது என்பன உட்பட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டவைகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார், கல்வியைக் காவி மயமாக்கும் முருகன் மாநாட்டுத் தீர்மானங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ள ரவிக்குமார், “பழனியில் தமிழ்நாடு அரசின் சார்பில் நேற்றும் இன்றும் (24-25)  நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டில் இன்று 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அவற்றுள், 5 ஆவது தீர்மானமாக : “முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது” எனவும்;

8 ஆவது தீர்மானமாக: “விழாக் காலங்களில் அருள்மிகு கந்தசஷ்டி முருகன் திருக்கோயில்களில் மாணவ, மாணவியர்களைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது” எனவும்;

12 ஆவது தீர்மானமாக: “முருகப் பெருமானின் பெருமைகள் மற்றும் இலக்கியங்கள் குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மிகப் பாடப்பிரிவுகளை ஏற்படுத்த அரசுக்கு பரிந்துரைக்கலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது” எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கல்வியை சமயச் சார்புடையதாக்குதல் என்னும் பாஜக அரசின் இந்துத்துவ செயல்திட்டத்தை இது முருகன் பெயரால் செயல்படுத்தும் முயற்சியன்றி வேறல்ல. இந்து சமய அறநிலையத் துறை தனது துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் அதை எவரும் விமர்சிக்கப் போவதில்லை. ஆனால், கல்வித் துறைக்குள் சமயத்தைக் கொண்டுவந்து திணிப்பது சமயச்சார்பின்மை என்னும் அரசமைப்புச் சட்ட நெறிக்கு எதிரானதாகும். இது கண்டனத்துக்குரியது.” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், மதத்திலிருந்து அரசு விலகி நிற்க வேண்டும் என்பதே மதச்சார்பின்மை கோட்பாட்டின் அடிப்படை ஆகும். எந்த ஒரு மதத்தையும் பரப்புவது, பின்பற்றுவது அரசின் பணியாக இருக்கக் கூடாது. மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை பேணி பாதுகாக்கப்பட வேண்டும்.

இதை முறியடிக்கும் நோக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை பணிகளை மேற்கொள்வது நல்லது. மத அடிப்படையிலான விழாக்களை அரசின் சார்பில் நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

திமுக முக்கிய கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டவைகள் முருகன் மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது, திமுக தலைமைக்கு குடைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow