டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க நினைத்ததே திமுகதான்... இப்போது பச்சை நாடகம் நடத்துகிறார்கள்... அண்ணாமலை பகீர்!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதும் திமுக அரசு தான், சுரங்க ஒப்பந்தம் வெளியிடக் குறிப்புகள் கொடுத்ததும் திமுக அரசு தான் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Dec 1, 2024 - 16:01
 0
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க நினைத்ததே திமுகதான்... இப்போது பச்சை நாடகம் நடத்துகிறார்கள்... அண்ணாமலை பகீர்!
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க நினைத்ததே திமுகதான்... இப்போது பச்சை நாடகம் நடத்துகிறார்கள்... அண்ணாமலை பகீர்!

“மதுரை மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ஒன்றிய அரசு இரத்து செய்ய வேண்டும்! தமிழ்நாடு அரசு இதனை ஒருபோதும் அனுமதிக்காது! மாநில அரசின் அனுமதியின்றி இதுபோன்ற சுரங்கம் தோண்டுவதற்கான ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது என பிரதமர் மோடி சுரங்க அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும்” என முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். 

இதற்கு பதிலளித்துள்ள மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, “கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 18 அன்று, The New Indian Express ஊடகத்தில் வெளிவந்த செய்தியின்படி, மதுரையில் டங்ஸ்டன் உலோகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான சுரங்கம் அமைக்க, தமிழக அரசு, மத்திய அரசின் அனுமதி கோரி இருப்பதாகவும், தமிழக கனிம வளத்துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. 

மத்திய அரசின் சுரங்கத் துறை நேற்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 2024 பிப்ரவரி மாதம், மதுரையில் டங்ஸ்டன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பகுதியில் சுரங்கம் அமைக்க ஒப்பந்தப் புள்ளி அறிவிப்பதற்கு முன்பாக, தமிழக அரசு கொடுத்த குறிப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டன என்றும், ஒப்பந்தப் புள்ளி வெளியிட்ட பிப்ரவரி மாதம் முதல், ஒப்பந்தம் வழங்கப்பட்ட நவம்பர் 7, 2024 வரையிலான பத்து மாதங்கள், தமிழக அரசு இந்த ஒப்பந்தத்தைக் குறித்தோ, சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கவோ மத்திய அரசைத் தொடர்புகொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதும் திமுக அரசு தான். சுரங்க ஒப்பந்தம் வெளியிடக் குறிப்புகள் கொடுத்ததும் திமுக அரசு தான். கடந்த பத்து மாதங்களாக இது குறித்து வெளியில் தெரியாமல் மறைத்து வைத்திருந்த திமுக அரசு, தற்போது எதிர்ப்பு வருவதும், இது குறித்துத் தங்களுக்கு எதுவுமே தெரியாதது போல நாடகமாடுகிறது. 

இதே மதுரை அரிட்டாப்பட்டி பகுதியில், தமிழக அரசின் டாமின் நிறுவனம், 2008 முதல் 30 ஆண்டுகளுக்கு, 47.37 ஹெக்டேர் நிலத்தில் கிரானைட் சுரங்கம் அமைக்கக் குத்தகை பெற்றுள்ளதையும், தற்போது டாமின் நிறுவனம் தனது குத்தகை உரிமத்தைத் திருப்பிக் கொடுத்துள்ளதையும், மதுரை அரிட்டாப்பட்டி, மீனாட்சிபுரம் கிராமங்களில், மொத்தமுள்ள 20.16 சதுர கி.மீ. நில அளவில், 1.93 சதுர கி.மீ அளவே பல்லுயிர் பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் திமுக அரசு, மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ளது.

டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் ஒப்பந்தத்தில் தெரியாமல் கையெழுத்து இட்டுவிட்டேன் என்று, சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அரங்கேற்றிய அதே நாடகத்தை, தற்போது மீண்டும் அரங்கேற்றத் துடிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். திமுகவின் நாடகம், பொதுமக்களிடம் இனியும் எடுபடாது” எனத் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow