Director Thankar Bachan on Palm Wine Sales in Tamil Nadu : சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை பின்பற்றி பனை மற்றும் தென்னை மரங்களில் கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி வழங்கக்கோரி தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் இயக்குனர்கள் தங்கர்பச்சான், கெளதமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய தங்கர்பச்சான் கூறுகையில், ''ஆட்சி நடத்தக்கூடியவர்கள் விவசாயிகளை போராட வைக்கலாமா? கடிகாரத்தை பார்த்துக் கொண்டு மூன்று வேளை உணவு சாப்பிடுகிறீர்களா? உங்களுக்கு உணவு எங்கிருந்து கிடைக்கிறது என்று விவசாயிகளை கவனித்தீர்களா? விவசாயிகள் உழைப்பிற்கு அவர்களுக்கு என்ன கிடைக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?
பெரியார், அண்ணா இருந்திருந்தால் இதுபோன்று போராட்டம் நடத்தும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு இருப்பார்களா? உற்பத்தி செய்பவன் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று எண்ணி பார்த்தீர்களா? ஆட்சி செய்பவர்களுக்கு இந்த போராட்டம் ஒரு பொருட்டு கிடையாது. 1984ம் ஆண்டில் இருந்து நான் இந்த மாதிரியான போராட்டங்களில் கலந்து கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாய சங்கங்களை ஒன்றிணைத்து என் தலைமையில் கொண்டுவர வேண்டுமென்று நினைத்தேன். ஆனால் அரசியல் வேண்டாம் என்று விட்டுவிட்டேன். பெட்டிக்கடை வைத்திருப்பவன், கர்ச்சீப் விற்பவன் கூட மகிழ்ச்சியாக இருக்கிறான். ஆனால் 70% பேர் விவசாயம் செய்து வரும் நிலையில், எந்த விவசாயி மகிழ்ச்சியாக இருக்கிறார்?
ஒரே நாளில் 15 tmc தண்ணி கடலில் கலக்கிறது. இதற்கு என்ன மாற்று வழி அரசு செய்துள்ளது? எங்க ஊர் நெய்வேலியில் விவசாயிகள் நிலைத்த எடுப்பதற்கு வேளாண் துறை அமைச்சர் துடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் எங்கு திரும்பினாலும் டாஸ்மாக் மற்றும் மருந்து கடைகள் தான் உள்ளன. ஐந்து தென்னை மரம் இருந்தால் அந்த குடும்பத்தை அந்த மரம் காப்பாற்றும். முதல்வர் ஸ்டாலின் உள்பட அனைவரும் மக்கள் வரிப்பணத்தில் தான் வாழ்கின்றனர். ஆகவே அரசு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்க வேண்டும்'' என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தங்கர்பச்சான்(Thankar Bachan), ''விவசாயிகள் வாழ்நாள் முழுவதும் காலநிலை மாற்றம் மற்றும் கடனுடன் போராடி வருகிறார்கள். ஏற்கனவே அரசு கொடுக்கும் சாராயத்தை குடித்து லட்சக்கணக்கான மக்கள் இறக்கிறார்கள். பாமலினை ஏன் இறக்குமதி செய்கிறீர்கள்? வெளிநாட்டில் இருந்து வாங்குவதால் அதில் கிடைக்கும் கமிஷன் கிடைக்க வேண்டி பாமாலின் இறக்குமதி செய்கிறீர்கள்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிலும், வேளாண் துறை அமைச்சர் வீட்டிலும் பாமாலின் மூலம் சமைக்கிறார்களா? தேங்காயை வைத்து என்னென்ன செய்கிறார்கள் என்பதை பக்கத்து மாநிலமான கேரளாவை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள். தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகக்கூடிய நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவற்றுக்கு உரிய விலையை கொடுத்து வாங்கி, பாமாலினுக்கு மாறுதலாக விநியோகம் செய்யுங்கள். கள் இறக்கி விற்பனை செய்ய திமுக அரசு அதற்கு அனுமதி அளிக்க வேண்டும்'' என்றார்.
இயக்குனர் கௌதமன் கூறுகையில், ''தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் திமுக மற்றும் முன்பு ஆட்சி நடத்திய அதிமுக ஆகிய கட்சிகள் சாராயம் விற்பதில்தான் குறிக்கோளாக உள்ளன. கள் இறக்கி விற்பனை செய்தால் அவர்களுக்கு அந்த தொழில் பாதிப்பு ஏற்பட்டு விடும் என எண்ணுகிறார்கள். வங்கதேச கலவரம் போல ஒருநாள் விவசாயிகளுக்காக இந்த இளைய தலைமுறை அனைத்து சமாதிகளையும் அடித்து உடைக்கும். அப்போது தெரிய வரும்'' என்று கூறினார்.
முன்னதாக பேசிய பி.ஆர்.பாண்டியன், ''மத்திய அரசு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வேளாண் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய எந்த தடையும் இல்லை என சொல்லி இருப்பது போல தமிழ்நாட்டில் அரசு அனுமதிக்க வேண்டும். பாமாலினை தடை செய்ய வேண்டும். மருத்துவ குணம் கொண்ட தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் உள்ளிட்டவைகளை பொது வணிக அங்காடிகளில் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.