தமிழ்நாடு

"சீட் பெல்ட் அணியுங்கள் இளைஞர்களே" கதறும் குடும்பத்தினர்... வில்லன் நடிகரின் மகனுக்கு நேர்ந்த சோகம்!

சீட் பெல்ட் அணியாமல் காரில் வேகமாக சென்ற வில்லன் நடிகரின் மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


"சீட் பெல்ட் அணியுங்கள் இளைஞர்களே" கதறும் குடும்பத்தினர்... வில்லன் நடிகரின் மகனுக்கு நேர்ந்த சோகம்!

சீட் பெல்ட் அணிந்து பயணியுங்கள் என்று பல வகைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் விபத்துக்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக இளைஞர்கள் இதனை பின்பற்றாததாலேயே உயிரிழப்புக்கும் காரணம் ஆகி விடுகிறது. சென்னை போன்ற மெட்ரோ நகரில் காரில் செல்பவர்கள் பலர் சீட் பெல்ட்டே அணிவதில்லை என்பது அதிர்ச்சியான ஒன்று. இதே போல காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்ற திரைப்பட வில்லன் நடிகரின் மகன் உயிரிழந்த சோக சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. 

விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் பெயர் நித்தீஷ் ஆதித்யா. 21 வயதான இவர் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் படித்து வந்தார். சென்னை ஆர்.ஏ. புரம் ஸ்ரீ காலனி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் வில்லன் நடிகர் கார்த்திக்கின் மகன் தான் நித்தீஷ் ஆதித்யா. நேற்று (நவ. 1) அதிகாலை தனது நண்பர்கள் ஜெயகிருஷ்ணண் மற்றும் வெங்கட் ஆகியோருடன் தீபாவளி கொண்டாட்டம் முடித்து விட்டு காரில் வேளச்சேரி - தரமணி சாலை வழியாக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வேளச்சேரி  விஜயநகர் பேருந்து நிறுத்தம் அருகே செல்லும் போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.‌ இதில் காரை ஓட்டி சென்ற இளைஞர் நித்தீஷ் ஆதித்யா பரிதாபமாக உயிரிழந்தார். இவருடன் காரில் பயணம் செய்த ஜெய் கிருஷ்ணன், வெங்கட் இருவரும் காயங்களுடன் உயிர் தப்பினர்.

விபத்து குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதே நித்தீஷ் ஆதித்யா உயிரிழந்ததற்கு முக்கியம் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
நித்தீஷ் ஆதித்யா சீட் பெல்ட் அணியாமல் சீட்டிற்கு மட்டும் போட்டு இருந்துள்ளார். இதனால் கார் மோதிய வேகத்தில் காரின் ஏர்பேக் வெளியே வந்தது. ஆனால் அவர் நெஞ்சு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதால் உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சீட் பெல்ட் என்பது சிறியவர், பெரியவர் என்பது தனி கிடையாது அனைவரும் சீட் பெல்ட் அணிந்து வாகனத்தை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் குடும்பத்தினர் முன் வைக்கின்றனர். 

விபத்தில் உயிரிழந்த நித்தீஷ் ஆதித்யாவின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிறகு உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.  சென்னை போக்குவரத்து போலீசார் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றும்படி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால் இது போன்ற விபத்துக்களை பார்த்தாவது போக்குவரத்து விதிகளை அனைவரும் முறையாக பின்பற்ற வேண்டும் என்ற அறிவுறுத்தலை முன்வைக்கின்றனர் சென்னை போக்குவரத்து போலீசார்.