Haryana & Jammu And Kashmir Assembly Election Results 2024 : பாஜக ஆளும் அரியானாவில் கடந்த 5ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகின. இதேபோல், ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில் இந்த 2 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட உள்ளன. இதற்காக 2 மாநிலங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
அரியானாவில் 67.90% வாக்குகள் பதிவான நிலையில், பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் 3ஆவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று முதலமைச்சர் நையுப் சிங் சைனி தெரிவித்து இருந்தார்.
ஆனால், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெற்று வரும் அரியானாவில் தற்போது ஆட்சி மாற்றம் நிகழும் என்றும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014ம் ஆண்டிற்கு பின் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த பேரவைத் தேர்தல் என்பதால் யார் வெற்றி பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பேந்தர்ஸ் கட்சி உள்ளிட்ட இணைந்து போட்டியிட்டன. பாஜகவும், மக்கள் ஜன நாயக கட்சியும் இணைந்து மற்றொரு கூட்டணி அமைத்து போட்டியிட்டு இருந்தன.