திருமணத்தை மீறிய உறவு.. மது போதையில் தகராறு.. சஸ்பெண்ட் காவலர் கைது
அந்தியூர் காவல் நிலையத்தில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட பவானிசாகர் காவல் நிலைய காவலர் கார்த்திக் மது போதையில் தகராறில் ஈடுபட்டதை அடுத்து கைது செய்யப்பட்டு உள்ளார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சவுண்டப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (38). இவர் 2008 பேட்ச் காவலர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரிந்த போது ஏற்கனவே இரண்டு முறை தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு டி.ஜி.பி.யின் கருணையின் பேரில் மீண்டும் காவலர் பதவி கிடைத்தது.
தற்போது பவானிசாகர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வரும் கார்த்திக், அந்தியூர் அருகே உள்ள மைக்கேல் பாளையம் பகுதியில் உள்ள திருமணமான பெண் ராணி (27) என்பவருடன் ஆறு மாதம் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. கடந்த ஆறு மாதமாக இருவருக்குள்ளும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் 6ஆம் தேதி காலை 8 மணி அளவில் ராணி வீட்டிற்கு சென்று குடிபோதையில் வாய் தகராறு செய்துள்ளார். மேலும் இன்று காலை 8 மணிக்கு மீண்டும் ராணியின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். ராணி அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் செய்ய சென்றிருந்த போது, கார்த்திக் அந்தியூர் காவல் நிலையத்திற்கே சென்று காவலர்களிடம் தகராறு செய்துள்ளார்.
தவிர, உதவி ஆய்வாளர் சந்திரன் மற்றும் தலைமை காவலர் ராமச்சந்திரன் என்பவரிடம் தகராறு செய்து தகாத வார்த்தைகள் பேசி திட்டி உள்ளார். மேலும், தலைமை காவலர் ராமச்சந்திரனின் சட்டையை பிடித்து இழுத்து அநாகரிமாக நடந்து கொண்டுள்ளார்.
இது சம்பந்தமாக காவலர் கார்த்தி மீது, பொது இடத்தில் பொதுமக்கள் பார்வை படும்படி கள்ளக்காதலியை மானபங்கம் செய்தல், ஆபாசமாக பேசுதல், தலைமைக் காவலரின் சட்டையைப் பிடித்து இழுத்து கிழித்தல், பணி செய்ய விடாமல் தடுத்தல், உடன் சென்ற பெண் காவலர்களை தகாத வார்த்தையால் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தல், பெண்மைக்கு இழுக்கு ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ்க போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
தகாத உறவு வைத்திருந்த பெண் காவல் நிலையத்தில் புகார் செய்ய சென்றபோது உடன் சென்று காவல் நிலையத்திலேயே தகராறில் ஈடுபட்ட தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட காவலரால் அந்தியூர் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
What's Your Reaction?