திருவண்ணாமலை மாநகரில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். மேலும், கிரிவலப் பாதையில், ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் நவீன சுகாதார வளாகம், குடிநீர் வசதி மையம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், "தம்பி உதயநிதி ஸ்டாலின் கிரிவலம் போயிருக்கிறார். பவன் கல்யாண் சொன்னது உதயநிதி மனதில் தைத்துவிட்டது என்று நினைக்கிறேன். அதனால் அதிகப்படியான மக்கள் கிரிவலம் வரும் நிலையில் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்வதில் மகிழ்ச்சி.
கடந்த முறை கிரிவலத்தில் மக்கள் பேருந்துகள் கிடைக்காமல் அவதிப்பட்டார்கள். இன்று தங்கள் தவறுகளைத் திருத்திக்கொண்டு அவர்கள் கிரிவலம் போக ஆரம்பித்திருக்கிறார்கள் என்ற வகையில் எங்களுக்கு மகிழ்ச்சி தான்" எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், இதற்கு பதிலளித்துள்ள உதயநிதி ஸ்டாலின், “இந்நாள் ஆரியநர் செய்யும் சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டினால், முன்னாள் ஆளுநர் அக்காவுக்கு கோபம் வருகிறது! அக்கா அவர்களே, திருவண்ணாமலையில் ‘கிரி’வலம் வரும் பக்தர்களுக்கு எல்லா வசதிகளும் ‘சரி’யாக இருக்கிறதா என்று ஆய்வு தான் செய்தோம். நீங்கள் குதூகலிப்பது போல அது கிரிவலம் அல்ல – ‘சரி’ வலம்!
ஓடாத தேரை ஓட வைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்! ஆயிரக்கணக்கான கோவில்களுக்கு திருப்பணிச் செய்தவர் எங்கள் முதல்வர்! ‘எல்லோருக்கும் எல்லாம்’ என உழைக்கும் எங்களைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளைப் பார்த்தால், மக்களால் பல முறை நிராகரிக்கப்பட்ட அக்காவுக்கு கோபம் வரத்தான் செய்யும். நியாயம் தானே...!
நீங்கள் எவ்வளவு சத்தமிட்டாலும், அரசியலும் – ஆன்மீகமும் தமிழ்நாட்டில் என்றைக்கும் கலக்காது. ஒன்றிய அரசின் ‘டி.டி. தமிழை’ப்போல் - அக்காவும் இந்திக்கு வக்காலத்து வாங்கும் துரோகத்தை, தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.