தமிழ்நாடு

கூலிப்படை தலைவன் பில்லா கைது.. விமான நிலையத்தில் தட்டித் தூக்கிய போலீஸார்..

Mercenary Leader Billa Arrest : திருவண்ணாமலையில் பிரபல நகைக் கடை அதிபர் மகன்கள் கடத்தல் வழக்கில் கூலிப்படை தலைவன் பில்லா மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

கூலிப்படை தலைவன் பில்லா கைது.. விமான நிலையத்தில் தட்டித் தூக்கிய போலீஸார்..
Mercenary Leader Billa Arrest

Mercenary Leader Billa Arrest : திருவண்ணாமலை அசலியம்மன் கோவில் தெருவில் இயங்கி வரும் பிரபல  நகைக்கடை வியாபாரி நரேந்திரகுமார். இவரது மகன்கள் ஜித்தேஷ் மற்றும் ஹரிஹந்த். சகோதரர்களான இவர்கள் இருவரையும் அய்யங்குளத் தெருவை சேர்ந்த ஹன்ஸ்ராஜ் பெங்களூரைச் சேர்ந்த கூலிப்படை தலைவன் ப்ரீத்தம் குமார் என்கிற பில்லா உதவியுடன் கடந்த 27ஆம் தேதி இரவு திருவண்ணாமலை இராமலிங்கனார் தெருவில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் சரமாரியாக தாக்கி காரில் கடத்தி மின்னல் வேகத்தில் தப்பித்தனர்.

காரில் கடத்திச் சென்ற கடத்தல் கும்பல் ஜித்தேஷ் மற்றும் அரிஹந்த் குடும்பத்தாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு 70 லட்சம் பணம் மற்றும் நகைகள் வேண்டும் என மிரட்டியுள்ளனர். இதனால் செய்வது அறியாமல் தவித்த குடும்பத்தினர் பல மணி நேரத்திற்கு பிறகு 10 லட்சம் தருவதாக கூறி கடத்தல் கும்பலிடம் பேசி பணம் கொடுத்து மகனை மீட்க இடத்தை தேர்வு செய்தனர். 

திருவண்ணாமலை புறவழிச் சாலையில் பணத்தை கொண்டு வருமாறு கடத்தல் கும்பல் கூறியதையடுத்து பணத்தை எடுத்துக் கொண்டு சென்ற குடும்ப உறவினர்கள் பணத்தை கடத்தல் கும்பலிடம் கொடுக்க முயற்சி செய்தனர். இதற்கிடையே இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மர்ம கும்பலை பிடிக்க புறவழிச்சாலைக்குச் சென்று காத்திருந்தனர். காவல்துறையினர் இருப்பதைக் கண்ட கடத்தல் கும்பல் பணத்தைப் பெற்றுக் கொண்டு காரில் கடத்தப்பட்ட நகைக்கடை தொழிலதிபரின் மகன்களை விட்டுவிட்டு காரில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பித்தனர்.

கடத்தல் கும்பல் தப்பிப்பது கண்ட காவல்துறையினர் இரவு நேரத்தில் காரை பின் தொடர்ந்து சென்ற நிலையில் திருவண்ணாமலை மாவட்ட எல்லையான மேல் செங்கம் பகுதியில் காவல் துறையினர் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு கடத்தல் கும்பலை மடக்கி பிடித்தனர். காரில் இருந்த 10 லட்சத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் காரையும் பறிமுதல் செய்து கடத்தல் கும்பலை சேர்ந்த மூவரை பிடித்து மேல் செங்கம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திருவண்ணாமலையை சேர்ந்த அடகு கடை வியாபாரி ஹன்ஸ்ராஜ் பெங்களூருவில் உள்ள பிரபல கூலிப்படை தலைவன் பில்லாவை தொடர்பு கொண்டு இவர்களை கடத்தக் கூறியதாகவும் அதன் பேரில் பில்லா தனது அடியாட்களை அனுப்பி கடத்தியதும் விசாரணையில் அம்பலமானது.

இந்த நிலையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஹன்ஸ்ராஜ் பெங்களூர்வை சேர்ந்த விக்ரம், மனோ (எ) கபாலி மற்றும் வாசிம் ஆகிய நான்கு பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த கடத்தல் விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான பெங்களூருவைச் சேர்ந்த கூலிப்படை தலைவன் பிரீத்தம் குமார் (எ) பில்லா மற்றும் இந்த குற்ற செயலில் தொடர்புடைய மேலும் சிலரையும் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். போலீசார் வருவதை அறிந்த கூலிப்படை தலைவன் விமானம் மூலம் மும்பை தப்பிப்பதற்கு விமான நிலையம் சென்றுள்ளான்.

இதனை அறிந்த போலீசார் விமான நிலையத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்ட பொழுது மும்பை செல்லும் விமானத்தில் பில்லா தப்பித்ததாக தெரிகிறது. தொடர்ந்து பில்லா எங்கு சென்றான்?எந்த விமானத்தில் சென்றான்? என்பது குறித்து விமானத்துறை அதிகாரிகளிடம் போலீசார் விசாரித்ததின் அடிப்படையில் மும்பை தப்பி சென்றது ஊர்ஜிதமானது. தொடர்ந்து மும்பை போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து திருவண்ணாமலை போலீசார் பெங்களூருவிலிருந்து மும்பைக்கு விரைந்து சென்றனர். விமான நிலையத்தில் இறங்கியவுடன் மும்பை போலீசார் கூலிப்படை கும்பல் தலைவன் பில்லாவை விமான நிலையத்திலேயே கைது செய்து பிடித்தனர்.

தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை மும்பைக்கு சென்ற திருவண்ணாமலை போலீசார் கூலிப்படை கும்பல் தலைவன் பில்லாவை அங்கிருந்து விமானம் மூலம் பெங்களூர் அழைத்து வந்து திருவண்ணாமலையில் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த வழக்கில் திருவண்ணாமலை அடுத்த பறையம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முயல் என்கிற ராஜ்குமார் மற்றும் சதீஷ் ஆகியோரை கைது செய்த திருவண்ணாமலை நகர போலீசார் தப்பித்துச் சென்றுள்ள பறையம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் மற்றும் அண்ணாமலையை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

குறிப்பாக இந்த கடத்தல் விவகாரத்தில் பெங்களூருவைச் சேர்ந்த 4 பேரும் திருவண்ணாமலையைச் சேர்ந்த 3 பேரும் என் இதுவரை 7 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், தலைமறைவாக உள்ள இரண்டு குற்றவாளிகளை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.