பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட இந்த விவகாரத்தில் 30 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் 28 பேர் கைது செய்யப்பட்டனர் இதில் ரௌடி திருவேங்கடம் போலீசாரை தாக்கி தப்ப முயன்ற போது என்கவுண்டர் செய்யப்பட்டார். மீதமுள்ள 27 பேரில் 26 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது.
90 நாட்களுக்குள் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை முடித்து சுமார் 5000 பக்கம் குற்ற பத்திரிக்கையை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அடுத்த கட்ட நடவடிக்கையாக குற்றப்பத்திரிக்கையை குற்றவாளிகளுக்கு நகல் வழங்குவதற்காக விசாரணை நீதிமன்றத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் பென் டிரைவ் மூலம் குற்றப் பத்திரிக்கையை குற்றவாளிகளுக்கு கொடுக்கப்பட்ட போது அதை வாங்க குற்றவாளிகள் தரப்பில் மறுப்பு தெரிவித்துள்ளனர். பென்டிரைவ் மூலமாக குற்றப்பத்திரிக்கையை வாங்கினால் அதை படித்துப் பார்ப்பது கடினம் எனவும் பேப்பர் வடிவில் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி ரகுபதி ராஜன் முன் ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள் 27 பேர் சிறையில் இருந்து அழைத்துவரப்பட்டு ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 5000 பக்கம் உடைய குற்றப்பத்திரிக்கையை அட்டைப் பெட்டியில் வைத்து அனைவருக்கும் நகலானது வழங்கப்பட்டது.
சுமார் 1லட்சத்து 35 ஆயிரம் பக்கங்களை பேப்பர் வடிவில் 27 குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. இதனை எடுத்து குறுக்கு விசாரணைக்காக இந்த வழக்கு விசாரணை சென்னை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.வருகிற 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அடுத்த கட்டமாக சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்கள் ஆவணங்கள் அனைத்தும் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வழக்கு நடத்தப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.