தோனி பாணியில் பதிலடி.. சாம்பியன் பட்டம் வென்றது இலங்கை மகளிர் அணி..

Womens Asia Cup 2024 : மகளிர் டி20 ஆசியக்கோப்பை 2024 போட்டியில் இந்திய மகளிர் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Jul 28, 2024 - 18:58
Jul 29, 2024 - 09:54
 0
தோனி பாணியில் பதிலடி.. சாம்பியன் பட்டம் வென்றது இலங்கை மகளிர் அணி..
கோப்பையை வென்ற உற்சாகத்தில் இலங்கை மகளிர் அணியினர்

Women's Asia Cup 2024 : இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மகளிர் டி20 ஆசியக்கோப்பை 2024 இறுதிப்போட்டி இலங்கையின் தம்புலா மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்தது.

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஷபாலி வர்மா (16), உமா சேத்ரி (9), ஹர்மன்பிரீத் சிங் (11) என அடுத்தடுத்து வெளியேறினர். ஆனாலும், மற்றொரு புறம் அபாரமாக ஆடிய ஸ்மிருதி மந்தனா [Smriti Mandhana] சர்வதேச டி20 போட்டிகளில் 26ஆவது சதத்தை பதிவு செய்தார். மேலும், 47 பந்துகளில் [10 பவுண்டரிகள்] 67 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

கடைசி கட்டத்தில் ரிச்சா கோஷ் 14 பந்துகளில் [4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்] 35 ரன்களும், ஜெமிமா ரோட்ரிஜியஸ் 16 பந்துகளில் [3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்] 29 ரன்களும் எடுத்து இந்திய அணி ஓரளவு நல்ல ஸ்கோரை எட்ட உதவினர். இலங்கை தரப்பில் கவிஷா தில்ஹரி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் விஷ்மி குனரத்னே ஒரு ரன் எடுத்திருந்த நிலையில், 2ஆவது ஓவரிலேயே ரன் அவுட் ஆகி வெளியேறினார். தொடக்கத்திலேயே இந்திய மகளிர் அணி விக்கெட்டை கைப்பற்றியதால், எளிதில் வென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், மாறாக சமரி அத்தப்பத்து மற்றும் ஹர்ஷிதா சமரவிக்ரம [Harshitha Samarawickrama] இருவரும் இணைந்து இலங்கை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இருவரும் இணைந்து 2ஆவது விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்தனர். அபாரமாக ஆடிய சமரி அத்தப்பத்து [Chamari Athapaththu] 43 பந்துகளில் [9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்] 61 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து ஹர்ஷிதா சமரவிக்ரம 43 பந்துகளில் அரைசதம் கடந்தார். அதன் பின்னர் இலங்கை அணியின் வெற்றி இலகுவானது. 18.4 ஓவர்களில் இலங்கை அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 167 ரன்கள் எடுத்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்ஷிதா சமரவிக்ரம 51 பந்துகளில் [6பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்] 69 ரன்கள் எடுத்தார்.

அவருக்கு உறுதுணையாக இருந்து, கடைசிக் கட்டத்தில் அதிரடியாக ஆடிய கவிஷா தில்ஹரி 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். போட்டியின் சிறந்த வீராங்கனைக்கான விருதினை ஹர்ஷிதா சமரவிக்ரம பெற்றார். தொடரின் சிறந்த வீராங்கனைக்கான விருதினை சமரி அத்தப்பத்து பெற்றார். மகளிர் ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரை இலங்கை வெல்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

2011 ஆடவர் உலகக்கோப்பை தொடரின் இலங்கை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் மகேந்திர சிங் தோனி சிக்ஸர் விளாசி இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார். அதைப் போலவே, இந்த இறுதிப் போட்டியில் இலங்கை அணி வீராங்கனை கவிஷா தில்ஹரி [Kavisha Dilhari] சிக்ஸர் அடித்து, இந்திய அணியின் கோப்பை கனவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow