மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இரண்டு நாள் பயணமாக நேற்று (பிப் 25) இரவு கோவைக்கு வருகை தந்தார். இவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து இன்று (பிப். 26) காலை கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார். தொடர்ந்து, கோவை மக்கள் அனைவருக்கும் வணக்கம் என தமிழில் கூறியபடி உரையைத் தொடங்கிய அமித்ஷா, தமிழக மக்கள் அனைவருக்கும் சிவராத்திரி வாழ்த்துகளை தெரிவித்தார்.
பின்னர் பேசிய அவர், உலகின் மிகவும் தொன்மையான மொழியான தமிழிலே என்னால் பேச முடியவில்லை என்பதை வருத்தத்தோடு, மன்னிப்பு கேட்டுக் கொண்டு தொடங்குகிறேன்.கோவையோடு சேர்த்து மூன்று மாவட்டங்களில் கட்சி அலுவலகம் திறக்கப்படுகிறது. இந்த 2024-ஆம் ஆண்டு பாஜக-வை பொறுத்த வரை வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஆண்டாக இருக்கிறது. அதே 2024-ஆம் ஆண்டு தான் பிரதமர் மூன்றாவது முறையாக பதவியேற்று வழி நடத்திக் கொண்டு இருக்கிறார்.
மேலும், ஒடிசாவில் முழு மெஜாரிட்டியோடு பதவியேற்று இருக்கிறோம். ஆந்திர பிரதேசத்திலும் என்.டி.ஏ ஆட்சிக்கு வந்து இருக்கிறது. சமீபத்திய தேர்தலில் ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய பகுதிகளில் ஹாட்ரிக் வெற்றி பெற்று மக்களின் நம்பிக்கைக்கு உரிய கட்சி பாஜக என்பதை நிரூபித்து உள்ளது. 2025-ஆம் ஆண்டின் தொடக்கம் டெல்லி வெற்றியோடு தான் தொடங்குகிறது.
இதேபோல், 2026-ஆம் ஆண்டின் தொடக்கம் தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணி வெற்றி ஆட்சியுடன் தான் துவங்கப் போகிறது. திமுக-வின் தேச விரோத ஆட்சி, மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் நேரம் துவங்கி விட்டது. பாஜக தொண்டர்கள் மற்றும் தமிழக மக்கள் உறுதியாக இருங்கள். 2026-ல் என்.டி.ஏ ஆட்சி தமிழகத்தில் உருவாகப் போவது உறுதி. தமிழகத்தில் உருவாகப் போகும் புதிய ஆட்சி ஒரு முன் உதாரணமாக, புதிய யுகத்தை உருவாக்கும் ஆட்சியாக இருக்கும்.
இந்த வகுப்பு வாதம், பிரிவினைவாதம் என்ற சிந்தனைகள் எல்லாம் முடிவுக்கு கொண்டு வரப்படும். தமிழகத்தில் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்படும். அதேபோல தமிழ்நாட்டில் வேரூன்றி இருக்கும் தேச விரோத சக்தி வேரோடு பிடுங்கி எறியப்படும். அந்த புதிய ஆட்சியில், புதிய திட்டங்கள், புதிய எண்ணங்கள் அனைத்தும் உருவாக்கப்படும். பாரதிய ஜனதா ஆட்சி நடக்கும் ஒவ்வொரு மாநிலத்திலும் பிரதமர் நரேந்திர மோடி ஒரு முத்திரையை பதித்துக் கொண்டு இருக்கிறார்.
தமிழ் மக்களின் வாழ்வியல், மொழி வளம், கலாசாரம், ஆகியவற்றை மதிக்கக் கூடிய போற்றக் கூடிய ஒரு தலைவராக மோடி இருக்கிறார். ஜனநாயகத்தின் கோவிலாக கருதப்படும் நாடாளுமன்றத்தில் நம் முன்னோர் மூவேந்தர்களின் கையை அலங்கரித்த செங்கோல் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. இதைவிட தமிழுக்கு தனிச்சிறப்பு வேறு யாரால் செய்ய முடியும். இந்தியாவில் இருக்கக் கூடிய மற்ற மாநிலங்களை பார்க்கும் போது, தமிழ்நாட்டில் மட்டும் தான் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலையில் சீரழிந்து காணப்படுகிறது.
பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருக்கிறார். இதுபோன்ற பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சுதந்திரமாக சென்று வருவதற்கான சூழல் கூட இங்கு இல்லை. அதேபோல வேங்கை வயல் பிரச்சனையில் 700 நாட்கள் கடந்த போதும் குற்றவாளியை கண்டுபிடிக்கவில்லை. கள்ளச்சாராயம் விற்பனை அமோகமாக நடந்து கொண்டு இருக்கிறது. கள்ளச்சாராயம் விற்பவர்களை கைது செய்யாமல், கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என புகார் கொடுத்த கல்லூரி மாணவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள்.
இங்கு தேச விரோத சிந்தனை மட்டும் தான் ஆட்சி கட்டிலில் இருக்கிறது. 1998-ல் நடைபெற்ற வெடிகுண்டு சம்பவத்தில் காரணமானவர்களை கூட ராஜ மரியாதையோடு அடக்கம் செய்யும் ஆட்சி தான் இங்கு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. கனிம வள கொள்ளை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. அது கூட ஆட்சியாளர்களின் முழு அதிகாரத்தோடு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இதில் ஊழலில் திராவிட முன்னேற்ற கழகத்தினர் மாஸ்டர் டிகிரி பெற்றவர்களாக இருக்கின்றனர்.
அதில் ஒரு தலைவர் வேலை வாங்கி கொடுப்பதற்காக லஞ்சம் வாங்கி மிகப்பெரிய சாதனை படைத்து இருக்கிறார். மற்றொரு தலைவர் மணி லாண்டரிங் வழக்கு மற்றும் செம்மணல் கடத்தல் வழக்குகளில் சிக்கிக் கொண்டு இருக்கிறார். இன்னும் ஒரு தலைவர் அவருடைய வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்து வைத்து இருப்பதாக வழக்கு இருக்கிறது. இன்னும் ஒரு தலைவர், நிலக்கரியில் மிகப்பெரிய ஊழல் செய்து இருக்கிறார். மற்றும் ஒரு தலைவர் 6 ஆயிரம் கோடி CRIDP ஊழலில் சிக்கி இருக்கிரார்.
அதேபோல் என்னால் மறக்கவே முடியாது 2 ஜி ஊழல். இதைப் பார்த்தால் யாரெல்லாம் ஊழல் பெருச்சாளிகளோ அவர்களையெல்லாம் திமுக தேடி மெம்பராக சேர்த்து உள்ளது. இந்த ஊழல்வாதிகளால் தமிழகம் துன்பத்தில் திகைத்து கொண்டு இருக்கிறது. இதனால் தங்களுடைய அவலங்கள் வெளிப்பட்டு விடக் கூடாது என்பதற்காக முதல்வர் ஸ்டாலினும் அவருடைய புதல்வனும் ஏதாவது ஒரு விஷயத்தை புதிது புதிதாக உருவாக்குகிறார்கள்.
ஸ்டாலினுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் புதிது புதிதாக ஏதாவது கண்டுபிடித்துக் கொண்டு இருக்கிறீர்கள். அனைத்து கட்சிகளும் கூட்டம் போட்டு தொகுதி மறு சீரமைப்பு பற்றி பேச போகிறீர்கள் என்பதை கேள்விப்பட்டேன். இதை நீங்கள் புது பிரச்சனையாக உருவாக்கி இருக்கிறீர்கள். மோடி நாடாளுமன்றத்தில் மிக தெளிவாக சொல்லிவிட்டார். எந்த தென்னிந்திய மாநிலங்களுக்கும் இருக்கும் நாடாளுமன்ற சீட்டுகளில் ஒன்று கூட குறையாது கூடுதலாக தான் கிடைக்கும் என்று உறுதிப்படுத்தி இருக்கிறார்.
மறு சீரமைப்பின் படி விகிதாச்சார அடிப்படையில் சீட்டுகள் ஒதுக்கப்படும். இதில் கூடுதலான சீட்டுகள் கிடைக்குமே தவிர, யாருக்கும் எந்த குறைவும் ஏற்படாது என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வர் ஸ்டாலினுக்கு ஒன்றை நான் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் தமிழக மக்களிடம் மிகப்பெரிய பொய்யைச் சொல்லி துரோகம் இழைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். நான் தற்போது புள்ளி விவரங்களோடு நின்று கொண்டு இருக்கிறேன்.
மறுசீரமைப்பால் மக்களுக்கு இழப்பு ஏற்படுகிறது என நீங்கள் தெரிவிப்பதை மிகவும் கண்டிக்கிறேன். இதற்கு நீங்கள் எனக்கு பதில் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறீர்கள். எதன் அடிப்படையில் இப்படி ஒரு பொய்யை நீங்கள் கூறுகிறீர்கள் என்பதற்கு நிச்சயம் பதில் கூறியே ஆக வேண்டும். 2004 -14 பத்தாண்டு கால ஆட்சியில், தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட்ட மாநில தொகை, ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 9001 கோடி ரூபாய். 2014 - 2024 வரை ஐந்து மடங்கு நிதி அதிகமாக வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் மோடி அரசு அதை 5 மடங்காக உயர்த்திக் கொடுத்து இருக்கிறது.
இது மட்டுமல்லாமல் கட்டுமான பணிகளுக்காக ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டிற்கு மோடி அரசு அநியாயம் இழைக்கிறது என்று மக்களிடம் பொய் கூறிக் கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் மத்தியில் கூட்டணியில் ஆட்சியில் இருந்த பொழுது தான் மக்களுக்கு துரோகத்தை இழைத்துக் கொண்டு இருந்தீர்கள். எய்ம்ஸுக்காக இரண்டாயிரம் கோடி ரூபாய், மீன்வளத் துறை பராமரிப்புக்கு 6000 கோடி ரூபாய், பேரிடர் பாதுகாப்பு நிதி, பல்வேறு மத்திய அரசின் நலத்திட்டங்களுக்காக ஏராளமான தொகைகள் தமிழகத்திற்காக ஒதுக்கப்பட்டது.
பாரதிய ஜனதா தொண்டர்கள் ஒவ்வொருவரும், திமுக ஆட்சியில் நடக்கும் ஒவ்வொரு அவலங்களையும் தமிழக மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். தமிழ்நாட்டிற்காகவும் தமிழக மக்களுக்காகவும் லட்சக்கணக்கான கோடிகளை, பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கி தமிழ் மொழி, கலாசாரம் பண்பாடுக்காக பாடுபட்டுக் கொண்டு இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்துச் சென்று மக்களிடம் சேர்க்க வேண்டும். மகாராஷ்டிரா, ஹரியானாவை தாண்டி மிகப்பெரிய வெற்றியை வரும் தேர்தலில் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா பெறவிருக்கிறது என்று கூறினார்.