கருணாநிதியை சகட்டுமேனிக்கு திட்டிய சீமான்.. புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு

முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக, அளித்த புகாரில் சீமான் மீது தான்தோன்றி மலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Nov 8, 2024 - 21:46
 0
கருணாநிதியை சகட்டுமேனிக்கு திட்டிய சீமான்.. புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு
முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக சீமான் மீது வழக்குப் பதிவு

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலின் போது பிரசாரம் மேற்கொண்ட சாட்டை துரைமுருகன், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்தும், தமிழ்நாடு அரசு குறித்தும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. 

இந்த புகாரின்பேரில் திருச்சி சைபர் கிரைம் போலீசார் சாட்டை துரைமுருகனை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திருச்சியில் இருந்து வந்த சைபர் கிரைம் போலீசார், குற்றால அருவியில் தங்கி இருந்த சாட்டை துரைமுருகனை கைது செய்துள்ளது

நாம் தமிழர் நிர்வாகி சாட்டை துரைமுருகனை கைது செய்ததற்கு எதிராக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார் தொலைகாட்சிகளுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில், “சாட்டை துரைமுருகன் என்னைவிட அதிகமாக பேசவில்லை; அவதுாறாகவும் பேசவில்லை. கருணாநிதியை விமர்சித்து ஏற்கனவே இருந்த பாட்டைத்தான் பாடினார். பாடலை எழுதியவர், பாடியவரை விட்டு விட்டு, மீண்டும் எடுத்து வந்து பாடியவரை கைது செய்துள்ளனர்.

கருணாநிதி என்ன இறைத்துாதரா, இயேசுவா அல்லது பகவான் கிருஷ்ணனா? 'கள்ளத்தனம் செய்த கிராதகன் கருணாநிதி; சதிகாரன் கருணாநிதி; சண்டாளன் கருணாநிதி' என நான் பாடுகிறேன். கருணாநிதி பற்றிய பாடலை பாடுகிற என்னை கைது செய்து பாருங்கள். பிள்ளைப் பூச்சிகளைப் பிடித்து விளையாடும் நீங்கள், தேள், பாம்பு, சிங்கம், புலியோடு விளையாட முடியுமா?

அதிகாரம் வந்தபின், கருணாநிதியை புனிதர் ஆக்கப் பார்க்கிறார் முதல்வர் ஸ்டாலின். கருணாநிதியின் அரசியல் வருகைக்குப்பின், தீய சக்தியின் ஆட்சியும் துவங்கியது. ஊழல், கொலை, கொள்ளை, லஞ்சம், சாராயம் உள்ளிட்டவை, அவரது ஆட்சியில்தான் வந்தது” என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை, கடுமையாக இழிவுபடுத்தி அவதூறாக பேசியதாக, கரூரை சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் என்பவர் நீதிமன்றத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி கரூர் வழக்கறிஞர் தமிழ் இராஜேந்திரன் கடந்த அக்டோபர் 07ஆம் தேதி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி, கடந்த அக்டோபர் 14ஆம் தேதி அந்த மனுவை அனுமதித்து, நடவடிக்கை எடுக்க தாந்தோணிமலை காவல் நிலையத்திற்கு உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் தான்தோன்றி மலை காவல் நிலையத்தில் குற்றவியல் சட்டப்பிரிவு அவதூறாக பேசுதல், இழிவுபடுத்தும் நோக்கத்தில் பேசி இணையதளத்தில் வெளியிடுதல் உள்ளிட்ட 352, 356  இரண்டு சட்டப்பிரிவுகள் கீழ் நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow