அரசியல்

தடையை மீறி பேரணி.. கிருஷ்ணசாமி மீது போலீஸார் அதிரடி நடவடிக்கை

தடையை மீறி பேரணி செல்ல முயன்ற புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்பட 686 பேர் மீது எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தடையை மீறி பேரணி.. கிருஷ்ணசாமி மீது போலீஸார் அதிரடி நடவடிக்கை
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்பட 686 பேர் மீது வழக்குப்பதிவு

மாஞ்சோலை தோட்டத் தொழிலாளா்களைக் கட்டாயப்படுத்தி வெளியேற்றுவதைத் தடுத்த நிறுத்தக் கோரியும், அருந்தியருக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதால் ஆதிதிராவிடா்களுக்கு முழுமையான இடஒதுக்கீடு கிடைக்காமல் போவதைக் கண்டித்தும் நேற்று வியாழன் [07-11-24] அன்று ஆளுநா் மாளிகையை நோக்கி பேரணி நடைபெறும் என்று கிருஷ்ணசாமி அறிவித்திருந்தாா்.

அதன்படி, பேரணி செல்வதற்காக எழும்பூா் ராஜரத்தினம் மைதானம் அருகில் புதிய தமிழகம் கட்சியைச் சோ்ந்தர்கள் கிருஷ்ணசாமி தலைமையில் திரண்டு முழக்கம் எழுப்பினா். பிறகு, பேரணியாகச் செல்ல முயன்றபோது, பேரணிக்கு முறையாக அனுமதி பெறவில்லை எனக் கூறி காவல் துறையினா் அவா்களைத் தடுத்து நிறுத்தினா். 

தடையை மீறி செல்ல முயன்ற அவா்களை போலீசார் தடுத்ததபோது, கிருஷ்ணசாமி உள்பட சில நிா்வாகிகள் தரையில் படுத்து சிறிது நேரம் தா்ணாவில் ஈடுபட்டனா். பிறகு, அனைவரும் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டனா்.

இந்த நிலையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட 686 பேர் மீது எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அனைவர் மீதும் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், பொது சொத்தை சேதப்படுத்துதல் சட்ட விரோதமாக கூடுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் எழும்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.