விறுவிறுப்பாக நடந்த கார் பந்தயம்.. ஜெட் வேகத்தில் பாய்ந்த கார்கள்.. ஆவலுடன் கண்டு ரசித்த பிரபலங்கள்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தங்கள் குழந்தைகளுடன் திரண்டு வந்த பொதுமக்கள் அதிவேகத்தில் கார்கள் சீறிப்பாய்ந்து செல்வதை பிரமிப்புடன் கண்டு ரசித்தனர். கார் பந்தயத்தில் பங்கேற்ற சில வீரர்களின் கார்களின் பழுதடைந்து அவர்களுக்கு ஏமாற்றம் அளித்தன. மேலும் போட்டி விறுவிறுப்பாக நடந்தபோது நாய் ஒன்று குறுக்கே ஓடி வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

Sep 2, 2024 - 03:27
Sep 2, 2024 - 15:39
 0
விறுவிறுப்பாக நடந்த கார் பந்தயம்.. ஜெட் வேகத்தில் பாய்ந்த கார்கள்.. ஆவலுடன் கண்டு ரசித்த பிரபலங்கள்!
Chennai Car Race

சென்னை: முதன்முறையாக சென்னையில் ஃபர்முலா 4 கார் பந்தயம் வெற்றிகரமாக நடந்துள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) ஏற்பாடு செய்திருந்த இந்தப் போட்டி நேற்று தொடங்கியது. முதலில் நேற்று மதியம் 2.30 மணிக்கு கார் பந்தயம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பிடம் (FIA) இருந்து பாதுகாப்பு சான்றிதழ் கிடைக்காததால் நீண்ட தாமதத்திற்கு பிறகு நேற்று மாலை தான் போட்டிகள் தொடங்கின. 

தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அண்ணா சாலை மன்றோ சிலை அருகே கார் பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நேற்று கார் பந்தய பயிற்சி சுற்று போட்டிகள் நடந்த நிலையில், 2வ து நாளான இன்று பிரதான போட்டிகள் நடந்தன. தீவுத்திடல், போர் நினைவுச் சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலை வரை மூன்றரை கிலோ மீட்டர் சுற்றளவில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட சாலையில் கார்கள் ஜெட் வேகத்தில் சீறிப் பாய்ந்தன.

இரண்டாவது நாளில் பார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் பந்தயத்தின் பிரதான சுற்றும் நடைபெற்றது. 16 வீரர்கள் இந்த போட்டியில்  பங்கேற்று கார்களை இயக்கத் தொடங்கினர். வீரர்கள் ஒருவரை ஒருவர் முந்தி செல்லும் காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பரபரப்பாக நடைபெற்ற போட்டியின் முடிவில் ஆஸ்திரேலியா வீரர் பார்டர் 19 நிமிடம் 42 வினாடிகளில் சுற்றுகளை முடித்து முதலிடம் பிடித்தார். இந்திய வீரர் ரோகன் இரண்டாவது இடத்தையும், மற்றொரு இந்திய வீரர் மோகன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். இதேபோல் பல்வேறு தகுதி சுற்று போட்டிகளும் நடந்தன. 

இந்தியாவில், அதுவும் சென்னையில் முதன்முறையாக 'ஸ்ட்ரீட் நைட் ரைசிங்' போட்டிகள் நடந்ததால்  சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தங்கள் குழந்தைகளுடன் திரண்டு வந்த பொதுமக்கள் அதிவேகத்தில் கார்கள் சீறிப்பாய்ந்து செல்வதை பிரமிப்புடன் கண்டு ரசித்தனர். கார் பந்தயத்தில் பங்கேற்ற சில வீரர்களின் கார்களின் பழுதடைந்து அவர்களுக்கு ஏமாற்றம் அளித்தன. மேலும் போட்டி விறுவிறுப்பாக நடந்தபோது நாய் ஒன்று குறுக்கே ஓடி வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. 

இந்த கார் பந்தயத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், 'பெங்கால் டைகர்' பார்முலா அணியின் உரிமையாளருமான சவுரவ் கங்குலி, பாலிவுட் நடிகரும், டெல்லி பார்முலா அணியின் உரிமையாளருமான அர்ஜுன் கபூர், தெலுங்கு நடிகரும், ஹைதராபாத் பார்முலா அணியின் உரிமையாளருமான நாக சைதன்யா, பாலிவுட் நடிகரும், கோவா பார்முலா அணியின் உரிமையாளருமான ஜான் ஆபிரகாம், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நேரில் கண்டு ரசித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow