அரசியல்

த.வெ.க. கொடியில் யானை சின்னம்.. தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்.. பி.எஸ்.பி. தகவல்

தமிழக வெற்றிக்கழக கொடியில் யானை சின்னம் இடம்பெற்றது குறித்து தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என கூற முடியாது என்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளர் கருப்பையா கூறியுள்ளார்.

த.வெ.க. கொடியில் யானை சின்னம்.. தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்.. பி.எஸ்.பி. தகவல்
தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் - பி.எஸ்.பி. தகவல்

கரூரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) கரூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கரூர் மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். கரூர் மாவட்ட தலைவராக வழக்கறிஞர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளராக வழக்கறிஞர் அன்பழகன் உள்ளிட்ட பலர் புதிய நிர்வாகிகளாக அறிவிக்கப்பட்டனர்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கருப்பையா, மாநிலத் துணைத் தலைவர் இளமான் சேகர், மாநில செயலாளர் மலையப்பன் உள்ளிட்டோர் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி வைத்து சிறப்புரை ஆற்றினர்.

முன்னதாக, கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகில் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பகுஜன் சமாஜ் கட்சி மாநில செயலாளர் கருப்பையா, "தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுப்பதற்கு பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட வாரியாக கட்சியை வலுப்படுத்த தீவிர களப்பணி ஆற்றி வருகிறது. தொடர்ச்சியாக கரூர் மாவட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். 

முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பந்தமாக, தேசிய தலைவர் மாயாவதி கூறியபடி வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னம் பொருத்தப்பட்டு இருப்பது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

சட்டரீதியாக இதனை சந்திப்போம். தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என கூற முடியாது. இது சம்பந்தமாக மீண்டும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு, கட்சியின் தேசிய செயலாளர் சதீஷ் சந்திர மிஸ்ரா மூலம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.