தமிழ்நாடு

அமைச்சர் சேகர் பாபு வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் சேகர் பாபு வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
அமைச்சர் சேகர் பாபு

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, அந்த வெடிகுண்டு விரைவில் வெடிக்க உள்ளதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஓட்டேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், வெடிப்பொருட்கள் எதுவும் கிடைக்காததால் இது வெறும் புரளி என்று தெரியவந்தது. முன்னதாக முதலமைச்சர் செல்லும் சாலையில் வெடிகுண்டு வைப்போம் என மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்தனர்.

அதாவது, காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை அழைப்பு ஒன்று வந்துள்ளது. அப்போது பேசிய மர்ம நபர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லும் சாலைகளான  நுங்கம்பாக்கம் மற்றும் கோடம்பாக்கம் ஆகிய பகுதியில் வெடிகுண்டு வைப்போம் எனக் கூறி மிரட்டல் விடுத்து இணைப்பை துண்டித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக கோடாம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பந்தப்பட்ட இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் வெடிப்பொருட்கள் எதுவும் கிடைக்காததால் இந்த தகவல் புரளி என்பது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், சென்னை மெரினா காமராஜர் சாலையில் அமைந்துள்ள எழிலக வளாகத்துக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.  எழிலகத்தின் வளாகத்தில் பல்வேறு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக நீர்வளத்துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல் பொதுப்பணி துறை அரசு ஊழியர்களின் தலைமை அலுவலகம் இங்கு தான் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு இன்று காலை மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக அண்ணா சதுக்கம் மற்றும் திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் வெடி பொருட்கள் எதுவும் கிடைக்காததால் இது வெறும் புரளி என்று தெரியவந்தது. மேலும், சந்தேகத்தின் பேரில் பாலாஜி என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.