அரசியல்

உங்கள் இரட்டை வேடம் தமிழக மக்களிடம் எடுபடாது.. ஸ்டாலினை விளாசிய தமிழிசை

தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் பல பிரச்சனைகளை மறைப்பதற்கு தொகுதி மறுவரையறை பிரச்சினையை ஸ்டாலின் கையில் எடுத்திருப்பதை மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள் என்றும் அவரது இரட்டை வேடம் தமிழக மக்களிடம் எடுபடாது என்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

உங்கள் இரட்டை வேடம் தமிழக மக்களிடம் எடுபடாது.. ஸ்டாலினை விளாசிய தமிழிசை
மு.க.ஸ்டாலின் -தமிழிசை செளந்தரராஜன்

அண்மையில் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதையடுத்து, பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு இன்று (மார்ச் 10) தொடங்க இருக்கிறது. இதையடுத்து, நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பாக திமுக எம்பிக்களின் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று (மார்ச் 9) நடைபெற்றது. 

இதில்,  திமுக பொருளாளரும், மக்களவை குழு தலைவருமான டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா, தயாநிதிமாறன், தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி உள்ளிட்ட எம்.பிக்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் எந்தெந்த பிரச்னைகளை முன்னெடுத்து பேசவேண்டும் என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார். 

மேலும், தொகுதி மறுசீரமைப்பின் விளைவுகள் தமிழ்நாட்டின் நியாயமான உரிமைகளைப் பாதிக்கும் என்பதால் அந்த உரிமையைக் காக்கும் அறவழி முயற்சிகளில் தமிழ்நாட்டில் இதுவரை நடந்திராத வகையில், 50-க்கும் மேற்பட்ட அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து, தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நியாயம் பெறுவதற்கான இயக்கத்தை முன்னெடுத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக நின்று, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதால் மக்களவைத் தொகுதிகளை இழக்க நேரிடும் அபாயத்தில் உள்ள ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் என பாதிக்கப்படவிருக்கும் 7 மாநிலங்களைச் சார்ந்த கட்சிகளையும் ஒருங்கிணைத்துப் போராட்டக் களத்திற்கு அழைத்து வரும் பொறுப்பை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து மேற்கொள்வது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

இந்நிலையில், தமிழகத்தில் தீர்க்கப்படாத மக்கள் பிரச்சினைகள் எவ்வளவோ இருக்க.. இல்லாத ஒரு பிரச்சினையைப் பற்றி கூட்டம் நடத்தி வேறு மாநிலங்களுக்கு செல்ல சொல்கிறீர்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “தமிழக முதலமைச்சர் அண்ணா ஸ்டாலினே,  திமுக  நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏழு மாநிலங்கள் தலைவர்களை சென்று சந்திப்பார்கள் என்றும் அதற்காக 7 மாநிலங்கள் செல்ல வேண்டும் என்றும் நேற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சொல்லியிருக்கிறார். முதல்வரே முதலில் உங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை அவரவர்களின் நாடாளுமன்ற தொகுதிக்கு ஒழுங்காக செல்ல சொல்லுங்கள்.

ஓட்டளித்த மக்களுக்கு நன்றி கூட  சொல்ல அவர்கள் தங்கள் தொகுதிக்கு செல்லவில்லை..  திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மக்களை கூட சந்திப்பதில்லை. அவர்களை நீங்கள் மற்ற மாநில முதல்வர்களை சந்திக்க சொல்கிறீர்கள் முதலில் வாக்களித்த நாடாளுமன்ற மக்களை சந்திக்க சொல்லுங்கள் பின்பு மற்ற மாநில மக்களை சந்திக்கலாம். முதலில் தங்கள் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள  பிரச்சனைகளை பேச சொல்லுங்க பின்பு தொகுதி வரையறை பற்றி பேசலாம்.

தமிழகத்தில் தீர்க்கப்படாத மக்கள் பிரச்சினைகள் எவ்வளவோ இருக்க... இல்லாத ஒரு பிரச்சினையைப் பற்றி கூட்டம் நடத்தி வேறு மாநிலங்களுக்கு செல்ல சொல்கிறீர்கள்.. மரியாதைக்குரிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தொகுதி வரையறையில்  தமிழகம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்று சொன்ன பின்பும்.... அன்றாட தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் பல பிரச்சனைகளை மறைப்பதற்கு இந்தப் பிரச்சினையை கையில் எடுத்திருப்பதை மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்... உங்கள் இரட்டை வேடம் தமிழக மக்களிடம் எடுபடாது” என்று விமர்சித்துள்ளார்.