பிரபல ரவுடி மொட்டை கிருஷ்ணனுக்கு செக்.. பார் கவுன்சில் அதிரடி உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும், மொட்டை கிருஷ்ணனை வழக்கறிஞர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்து அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

Sep 29, 2024 - 17:12
Sep 29, 2024 - 17:14
 0
பிரபல ரவுடி மொட்டை கிருஷ்ணனுக்கு செக்.. பார் கவுன்சில் அதிரடி உத்தரவு
மொட்டை கிருஷ்ணனை வழக்கறிஞர் பணியில் இருந்து இடைநீக்கம்

சென்னை பெரம்பூர் பகுதியில் கடந்த ஜூலை 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் வடசென்னை ரவுடியான நாகேந்திரன், மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷ் சகோதரர் பொன்னை பாலு, சிடி மணி உட்பட மொத்தம் 28 நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் அவர்களை மாறி மாறி காவலில் எடுத்து, செம்பியம் தனிப்படைப் போலீசார் விசாரணையும் நடத்தி வருகின்றனர். அதேபோல் கைது செய்யப்பட்டுள்ள நபர்களுடன் தொடர்பில் இருந்ததாக சுமார் 200க்கும் மேற்பட்ட நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜா, கடந்த 23ஆம் தேதி, போலீஸாரால் என்கவுன்டர் செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக கருதப்படும் பாம் சரவணன், சம்போ செந்தில், வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் ஆகியோர் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். சம்போ செந்திலின் கூட்டாளியான வழக்கறிஞர் கிருஷ்ணன் என்ற மொட்டை கிருஷ்ணன் வெளி நாட்டிற்கு குடும்பத்துடன் தப்பியோடிய நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் அடிக்கடி போனில் பேசியதாக, பிரபல திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தியனர். வழக்கு ஒன்றிற்காக வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் உடன் செல்போனில் பேசியதாக மோனிஷா போலீசாரிடம் தகவல் அளித்து இருந்தார்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்து வரும் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுக்கு எதிராக சென்னை காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியது. தாய்லாந்திற்கு தப்பி சென்று இருப்பதாக தகவல் வெளியான நிலையில், சென்னை காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியது.

சம்போ செந்தில் கூட்டாளியான வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பண உதவி செய்திருப்பது தெரியவந்துள்ள நிலையில் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனால், ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் மேலும் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கர்பூரில் 10 நாட்கள் தங்கியிருந்த கிருஷ்ணனை பிடிக்க தூதரக உதவியை நாடிய நிலையில் துபாய் தப்பியோட்டவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சவுதி அரேபியாவில் நண்பர்கள் உதவியோடு தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் இன்டர்போல் உதவியை நாட உள்ளதாக தகவல் வெளியானது.

மேலும், சம்போ செந்தில், ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு மொட்டை கிருஷ்ணன் மூலமாகவே அனைவரையும் தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்துள்ளது. சம்போ செந்தில், கிருஷ்ணன் மூலமாக ஹரிஹரன் உள்ளிட்டோர் மூலமாக மற்றவர்களை ஒன்றிணைத்தும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் என்கிற மொட்டை கிருஷ்ணனை வழக்கறிஞர் பணியில் இருந்து இடை நீக்கம் செய்து அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்பாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள்  ஹரிஹரன், அஸ்வத்தாமன், சிவா, ஹரிதரன் ஆகியோருக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow