உலகம்

அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போர்.. அஜர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!

By Christon
05 Mar 2026, 04:48 PM
ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்தாக அஜர்பைஜான் அரசு தெரிவித்துள்ளது.
அணு ஆயுத விவகாரத்தில் முடிவு எட்டப்படாததால், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதற்குப் பதிலடியாக ஈரான், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் மற்றும் கத்தார் போன்ற நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது.

அசர்பைஜான் விமான நிலையம் சேதம்

இந்தப் போர்ச் சூழலில், அஜர்பைஜான் நாட்டின் எல்லைப் பகுதிகளிலும் ஈரான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. குறிப்பாக,அஜர்பைஜானின் தலைநகரான நக்சிவனில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் முனையக் கட்டிடம் ஒன்று ஈரானின் ட்ரோன் தாக்குதலால் பலத்த சேதமடைந்துள்ளது. மற்றொரு ட்ரோன் ஷகராபாத் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு அருகில் விழுந்து வெடித்ததாக அஜர்பைஜான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அஜர்பைஜான் கண்டனம்

இந்தத் தாக்குதல்களில் இரண்டு பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அஜர்பைஜான் அரசு, "ஈரான் எல்லைப் பகுதியிலிருந்து நடத்தப்பட்ட இந்த ட்ரோன் தாக்குதல்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது சர்வதேச சட்டங்களை மீறும் செயலாகும். இதற்குப் பொருத்தமான பதிலடி கொடுக்க எங்களுக்கு உரிமை உண்டு" என்று எச்சரித்துள்ளது.

ஈரான் தூதருக்கு சம்மன்

தாக்குதல் குறித்த தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்ய, அஜர்பைஜான் அரசு அந்நாட்டிற்கான ஈரானிய தூதரை நேரில் அழைத்து விளக்கம் கேட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து ஈரான் உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற அத்துமீறல்கள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அஜர்பைஜான் வலியுறுத்தியுள்ளது.