சேலம் மாநகரில் முந்தைய அ.தி.மு.க., தி.மு.க அரசுகள் குடிநீர் விநியோகத்தை தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைத்ததை தற்போதைய த.வெ.க. அரசும் தொடர்வது பொதுமக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முந்தைய தி.மு.க. ஆட்சியில் தனியார் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த வி.சி.க., சும்யூனிஸ்ட்டுகள் தற்போது சைலன்ட் மோடிற்கு சென்றுள்ளதும் கடும் விமர்சனமாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதமே சூயஸ் நிறுவனத்தின் திட்டத்திற்கு எழுந்த எதிர்ப்பையும், 'அதிமுக, திமுக ரெண்டு கட்சிகளுமே கூட்டு களவாணிகள்' என்ற வி.சி.க.வின் விமர்சனத்தையும் நமது ரிப்போர்ட்டர் இதழில் பதிவு செய்திருந்தோம். இந்த நிலையில் திமுக, அதிமுகவை டீல் செய்த அதே சூயஸ் நிறுவனம், தவெக அரசுடன் ஒப்பந்தத்தை புதுப்பித்துள்ளது சேலம் அரசியல்வாதிகளிடம் சூடான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சேலம் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அ.தி.மு.க.வின் யாதவமூர்த்தியிடம் பேசினோம். "முந்தைய ஆட்சியில் தனியார் ஒப்பந்தத்தை நிறைவேற்ற தி.மு.க. துடியா துடிக்க, வி.சி.க, கம்யூனிஸ்ட்டுகள் எல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கிற மாதிரி நடிச்சாங்க. இப்பவும் அதே சூயஸ் நிறுவனத்துக்கே அனுமதி வழங்கி முதல்வர் விஜய் ஐந்து துறை அமைச்சர்களும் கையெழுத்துப் போட்டு, ஒப்பந்தத்தை இறுதி செய்திருக்கிறார்கள்.
குடிநீர் சம்பந்தப்பட்ட திட்டங்களுக்கு அரசுதான் செலவு செய்யணும். தனியாருக்கு கொடுக்கக் கூடாதுன்னு அதிமுக சார்பா எதிர்ப்பு தெரிவிச்சோம். அன்னைக்கு ஆளுங்கட்சியோட கொள்கை முடிவுன்னு சொல்லி தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சியினர் என 53 கவுன்சிலர்கள் கையெழுத்துப் போட்டு தீர்மானத்தை நிறைவேத்தினாங்க
இப்போ 24 ஆண்டுகளுக்கு பராமரிப்பு எனக் கூறி சமீபத்தில் 4,315 கோடி ரூபாய் திட்ட மதிப்பையும் அதிகரித்துள்ளது த.வெ.க. அரசு. இந்த அடிப்படையில் சூயஸ் நிறுவனம் சேலம் மக்களுக்கு கட்டண குடிநீர் திட்டத்த நிறைவேத்த போகுது. முதற்கட்ட பணிகளுக்குன்னு 1,035 கோடியை சூயஸ் நிறுவனத்துக்கு கொடுக்குறாங்க. இதுல தனியார் நிறுவன பங்கு 414.25 கோடி, மத்திய அரசின் அம்ரித் 20 திட்டத்தில 227.44 கோடி, மாநில அரசு நிதி 39392 கோடி. இதுவரை மாச தண்ணீர் கட்டணமா 150 ரூபாய் செலுத்தி வந்த சேலம் மக்கள், இனி 1,500 ரூபாய் கட்டுவாங்கன்னு புள்ளி விவர தகவல் சொல்லுது. முன்பு எதிர்ப்பு தெரிவிச்ச விசிக, கம்யூனிஸ்ட் எல்லாம் தவெக கூட்டணில இருக்கிறதால எதிர்ப்பு தெரிவிக்காம அடக்கி வாசிக்கிறாங்க" என்றார் கோபமாக.
இதுகுறித்து வி.சி.க. கவுன்சிலர் இமயவரம்பனிடம் கேட்டோம். "எங்க தலைவர் திருமாவளவன்கிட்ட இதுகுறித்து சொல்லியிருக்கோம். அவர் தனிப்பட்ட முறையில் விஜய்கிட்ட பேசுறதா சொல்லியிருக்கார். திட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் போகப்போறேன்' என்றார்.
தி.மு.க. மேயர் ராமச்சந்திரன் நமது அழைப்பை ஏற்காத நிலையில், அதிகாரிகளிடம் பேசினோம். "2021ல் அதிமுக, கொண்டுவந்த திட்டம்தான் இது. மாநகரில் பழைய பைப் எல்லாமே டேமேஜ். மொத்தமா சரி பண்ண மாநகராட்சியில் நிதி கிடையாது. அதனால எந்த அரசாங்கம் வந்தாலும் இப்படித்தான் செஞ்சாகணும்" என்றார்கள்.
அடிப்படை தேவையான குடிநீரிலும் கையை வைத்தால் எப்படி?