தமிழ்நாடு

அமைச்சர் துரைமுருகன் விடுவிப்பு ரத்து.. சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு

By VASUKI
24 Apr 2025, 01:07 PM
வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை விடுவித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று வேலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006-11 ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்த அமைச்சர் துரைமுருகன், 2007-2009 ஆம் ஆண்டு கால கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் சொத்துக்கள் சேர்த்ததாக 2011 ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.

அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கிலிருந்து இருவரையும் விடுவித்து வேலூர் சிறப்பு நீதிமன்றம் 2017 ம் ஆண்டு ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை நீதிபதி பி வேல்முருகன் விசாரித்தார். அப்போது அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி தரப்பில், சொத்துக்கள் வருமான வரிக்கணக்கில் காட்டப்பட்டுள்ளன. வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துக்கள், வழக்கு காலகட்டத்துக்கு முன் வாங்கப்பட்டவை. துரைமுருகன் மனைவிக்கு தனிப்பட்ட வருவாய் ஆதாரங்கள் இருந்தும், அவரை இல்லத்தரசி எனக் கூறி, அவருக்கு தனிப்பட்ட வருவாய் ஆதாரங்கள் இல்லை எனக் கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆவண ஆதாரங்களை சுட்டிக்காட்டி, இருவரையும் வழக்கில் இருந்து விடுவித்துள்ளதாக வாதிடப்பட்டது.

ஆவண ஆதாரங்களின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்த மறு ஆய்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதி, அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை சுக்கு குறிப்பு வழக்கிலிருந்து விடுவித்து வேலூர் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும் வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து, தினந்தோறும் விசாரணை நடத்தி ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் வேலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார்.