மதுரையில் ரூ.21 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்த வழக்கில் தலைமறைவாக இருந்த யூடியூபர் நிஷாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்டம் தேசம்பட்டி பகுதியில் பதுங்கியிருந்த அவரை அதியமான்கோட்டை போலீசார் பிடித்துள்ளனர்.
மதுரையில் ரூ.21 கோடி கொள்ளை
மதுரை பழங்காநத்தம் - காளவாசல் பைபாஸ் சாலையில் நேரு நகர் பகுதியில் அமைந்துள்ள தனிஷ்க் நகைக்கடையில் கடந்த நவம்பர் 12-ம் தேதி அதிகாலை கொள்ளை சம்பவம் நடைபெற்றது. முகத்தை மறைத்தபடி கருப்பு உடையில் வந்த மர்ம நபர், தனி ஒருவராக கடைக்குள் புகுந்து சுமார் 15 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றார். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.21 கோடி என போலீசார் தெரிவித்தனர்.
காதலியும் தந்தையும் ஏற்கனவே கைது
போலீசார் நடத்திய விசாரணையில், மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்த நிஷாந்த் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டர் அவரது காதலியான இன்ஸ்டாகிராம் பிரபல மீனாட்சி நாச்சியாருக்கு சொந்தமானது. இதையடுத்து மீனாட்சியையும், நிஷாந்தின் தந்தை சுரேஷையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், மாடக்குளம் கண்மாய் கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 6 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை போலீசார் மீட்டனர்.
தருமபுரியில் சிக்கிய நிஷாந்த்
கடந்த 4 நாட்களாக போலீசாரிடம் சிக்காமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடம் மாறி மாறி பதுங்கியிருந்த நிஷாந்தை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தமிழ்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், தருமபுரி மாவட்டம் தேசம்பட்டியில் பதுங்கியிருந்த நிஷாந்தை அதியமான்கோட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது, ரூ.21 கோடி தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. கொள்ளையின் பின்னணி மற்றும் மீதமுள்ள நகைகள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.