தமிழ்நாடு

தணிந்த வெப்பம்... திரும்பிய மழை! தமிழகத்துக்கு வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு!

By kazhugu k
26 Nov 2026, 07:38 AM
தமிழ்நாட்டில் மீண்டும் பரவலாக மழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கான மழை வாய்ப்பு குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கோடையில் கடுமையான வெப்பம் நிலவியது. வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையிலும் போதுமான மழை கிடைக்காமல் ஏமாற்றத்தைத் தந்தது.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது.

வட தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது.

சென்னையில் விட்டுவிட்டுப் பெய்து வந்த மழை நேற்று பகல் நேரத்தில் ஓய்ந்திருந்த நிலையில், இரவு நேரத்தில் மீண்டும் பெய்யத் தொடங்கியது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மன்னார் வளைகுடா முதல் தமிழகக் கடலோரப் பகுதிகளில் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி, தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

27-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருப்பூர், ஈரோடு, விழுப்புரம், கடலூர், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் குட்டம், வேலூர் ராஜாதோப்பு அணை, செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் பகுதிகளில் 60 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பெனுகொண்டபுரம், காரைக்கால், கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி அணை பகுதிகளில் 50 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு போதுமான மழை கிடைக்காததால் வேளாண் பணிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நகர்ப்புறங்களில் உள்ள குடிநீர் வழங்கும் நீர்நிலைகளிலும் நீர்மட்டம் குறைவாகவே உள்ளது.

சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளிலும் தண்ணீர் இருப்பு போதுமானதாக இல்லை. இந்த நிலையில், தமிழ்நாட்டில் மீண்டும் பரவலாக மழை பெய்யத் தொடங்கியுள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

மேலே உள்ள படத்தை 1280•720 என்ற அளவிற்கு மாற்றி தரவும்