தலைநகர் சென்னையில் மற்றுமொரு கொலை என்று இதைக் கடந்துபோக முடியவில்லை. காரணம், அரசியல் கொலை! ஆளுங்கட்சியான த.வெ.க.வில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் ஒரு கொடூரக் கொலையில் போய் முடிந்திருக்கிறது. இதன் பின்னணியில் இருப்பது ஆளும்கட்சியைச் சேர்ந்த ஒரு வி.ஐ.பி. என்பதுதான் காக்கிச்சட்டைகளையே அதிரவைக்கும் ஷாக் நியூஸ்!
இதுகுறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தோம். "சென்னை, பெசன்ட் நகரைச் சேர்ந்தவர் கண்ணன். சாஸ்திரி நகர் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு ரவுடிகள் பட்டியலில் கண்ணன் பெயரும் அடக்கம். இவர் ஐ.டி நிறுவனங்களுக்கு கார்களை வாடகைக்குக் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். அ.தி.மு.க.வில் பல்வேறு பொறுப்புகளில் இருந்த கண்ணன், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தவெகவுக்கு தாவினார். கட்சியில் சேர்ந்த சில நாட்களிலேயே தென்சென்னை மாவட்டச் செயலாளர் கே.வி.தாமுவுக்கு மிக நெருக்கமாகியிருக்கிறார். தாமுவுக்கு ஆல் இன் ஆலாக கண்ணன் இயங்கத் துவங்கினார். இதனால் மாவட்ட அளவில் பொறுப்பை பெறக்கூடிய தகுதிக்கு தன்னை உயர்த்திக்கொண்டார். இது பலரது கண்களை உறுத்த தொடங்கியது.
இந்த நிலையில்தான், கடந்த செப்டம்பர் 5ம் தேதி இரவு, வண்ணான்துறை எல்லையம்மன் கோயில் தெருவில் தன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார் கண்ணன். அப்போது அங்கு பைக்குகளில் வந்த மர்ம கும்பல் ஒன்று. கண் இமைக்கும் நேரத்தில் கண்ணனை சரமாரியாக வெட்டியது. அவர் தப்பி ஓடாமல் இருக்க முதலில் காலில் வெட்டிய அந்த கும்பல், தொடர்ந்து அவரது உடல் முழுவதும் வெட்ட ஆரம்பித்தது. இதற்கிடையே கண்ணனின் நண்பர்கள், அந்த மர்ம கும்பல் மீது கற்களை வீசினர். ஆனால், மர்ம கும்பலோ பட்டாக் சுத்திகளைக் காட்டி நண்பர்களை விரட்டி அடித்துவிட்டு, தொடர்ந்து கண்ணனை வெட்டி சாய்த்தது. சம்பவ இடத்திலே பலியானார் கண்ணன்.
கொலையை நேரில் பார்த்த கண்ணனின் சித்தி மகன் புருஷோத்தமன், சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கொலை நடந்த சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகவே விவகாரம் சூடு பிடித்தது. குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படையும் அமைக்கப்பட்டது.
இரவோடு இரவாக தேடுதல் வேட்டையை தீவிரமாக்கிய தனிப்படையினர், துப்பாக்கி முனையில் கொலை கும்பலை கைது செய்தனர். சில மணி நேர விசாரணைக்குப் பிறகு அடையாறு, ருக்மணி நகரைச் சேர்ந்த பரணி மற்றும் ராகேஷ் நரேஷ், மணிகண்டன், ஹரிஹரன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து கொலை செய்ததை போலீஸார் உறுதி செய்து அறிவித்தனர்.
விசாரணையில் பழிக்குப் பழியாக இச்சம்பவம் அரங்கேறியிருப்பது தெரியவந்திருக்கிறது. இதில் முதல் குற்றவாளியான பரணிதான் கொலைக்கு காரணம் என்பதும் தெரிய வந்திருக்கிறது. பரணியின் வாக்குமூலத்தில், 'என் பெரியப்பா சிவாவை 2009ல் கண்ணன் கொலை செய்தார். அதன்பிறகு என் தந்தை வேலுவை 2016ல் கொலை செய்தார். இந்த இரு சம்பவங்களின் போதும் நான் பள்ளி மாணவன். அப்போதே என் மனதில் பழிக்குப் பழியாக கண்ணனை கொல்ல வேண்டும் என்ற உணர்வு இருந்தது. ஆனால் அப்போது எதுவும் செய்ய முடியாததால், இப்போது அதை செய்து முடித்தேன். தனக்கு எதிரிகளே இல்லை என்பதுபோல் கண்ணன் சுதந்திரமாக நடமாடினார். இதையே எனது பலமாக மாற்றி அவரை கொலை செய்தேன்' என தெரிவித்திருக்கிறார்.
இது எல்லாம் தெரிந்த விவகாரம்தான். ஆனால் த.வெ.க. மாவட்டச் செயலாளர் ஒருவருக்கும், அமைச்சர் ஒருவருக்கும் ஒத்துப்போகவில்லை. லோக்கலில் இருவருக்கும் அடிக்கடி முட்டல் மோதல். இதைத் தொடர்ந்து மா.செ.வின் பின்புலத்தை அமைச்சர் தரப்பு விசாரித்தது. அப்போது மாசெ.வுக்கு பின்புலமாக இருப்பது கண்ணன் என தெரியவந்திருக்கிறது. கண்ணன் குறித்து விசாரித்தபோது, பரணி விவகாரம் தெரியவந்திருக்கிறது. அதன்பிறகே. பரணியை அழைத்துப் பேசிய அமைச்சர் தரப்பு, கண்ணனை போட்டுத் தள்ளும் விவகாரத்தில் பக்கபலமாக இருப்பதாக உறுதி அளித்தது. அதைத்தொடர்ந்தே முழு வேகத்துடன் களத்தில் இறங்கி தனக்கான டீமை உருவாக்கி கண்ணனை முடித்தார் பரணி.
முன்னதாக, பரணியின் உறவினர்களை சமீபத்தில் அழைத்து சமாதானம் பேசியிருக்கிறார் கண்ணன். அப்போது, 'எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். பழைய பகையை மனதில் வைத்துக்கொள்ள வேண்டாம். சமாதானமாக போய்விடுவோம். பரணி டிகிரி முடித்ததும் அவனுக்கு நல்ல வேலை வாங்கித்தருகிறேன்' என கண்ணன் சொல்லியிருக்கிறார். இதை உறவினர்கள் பரணியிடம் சொல்லவே, 'எதிர்காலம் படிப்பு, வேலை வாய்ப்பு ஆகியவை குறித்து மட்டுமேதான் எனது சிந்தனை இருக்கிறது' என சொல்லி வெள்ளைக்கொடி காட்டியிருக்கிறார் பரணி. ஆனால், அதன்பிறகு கண்ணனை கொலை செய்ய என்ன காரணம் என போலீஸார் விசாரித்தபோதுதான் இது ஆளுங்கட்சி புள்ளி தொடர்புடையது என்பது தெரியவந்திருக்கிறது. இதையெல்லாம் ஆதாரங்களுடன் உறுதிசெய்த பிறகு, முதல்வர் பார்வைக்கு கொண்டுசெல்ல போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட கண்ணன், ரவுடிகள் பட்டியலில் இருந்ததால் அவரை கண்காணிக்க தவறிய அடையாறு துணை கமிஷனர் கார்த்திகேயன், சாஸ்திரி நகர் இன்ஸ்பெக்டர் ரோகிணி ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பதவி படுத்தும் பாடு!
- கு. கணேஷ்குமார்