அரசியல்

விஜயின் அரசியல் நகர்வுகள்... தி.மு.க., கூட்டணி கட்சிகளில் பரபரப்பு!

By Sumalekha
15 Jul 2026, 09:00 PM
விஜயின் அரசியல் நகர்வுகள், தி.மு.க. உள்பட கூட்டணி கட்சிகள் தொடர்பான பல்வேறு தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளன.
திரும்புன பக்கம் மெல்லாம் மூட்டு வலிக்கு நிரந்தரத் தீர்வு'ன்னு விளம்பரம் வர்ற மாதிரி, பூச்சியாருக்குப் போகுற இடமெல்லாம் மொட்டக் கத்தியால முதுகுல குத்துற எதிரிகள்... 'இந்தக் கொசுக்கடியத் தாங்க முடியலடா சாமி!ன்னு கொட்டாவி விட்டுக்கிட்டே லேப்டாப்பைத் திறந்தார் கரப்ஸ்.

செந்தில் பாலாஜி விஷயத்தில் தி.மு.சு. தலைமை இந்த முறை அவரைக் காப்பாற்றப் பெரிய அளவு முயற்சியெல்லாம் செய்யவில்லை. ஊத்தங்கரை இளையராஜாவைத் தூக்குற முயற்சியைச் செய்தவர்களிடம் படு ஸ்ட்ராங்காகவே செந்தில் பாலாஜி மற்றும் அவர் தம்பிக்கு எதிராக வாக்குமூலம் வாங்கியிருக்கிறது போலீஸ். 'யாரைக் கேட்டு இப்படி ஒரு முயற்சி நடந்தது?' என்று தி.மு.க தலைவர் செம கோபத்தில் இருக்கிறாராம்.

ஆடிக் காத்தில் அம்மியே பறக்கும்போது, இந்த டம்மிகள் எம்மாத்திரம்.. ! மீசையை முறுக்கிவிட்டுக்கொண்டார் கரப்ஸ். அன்புமணி ராமதாஸ் நதிநீர் இணைப்புத் திட்டக் கோரிக்கையுடன் முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டபோது, 'சோபா மாடல், குதிரை பேரம்' என்றெல்லாம் இதற்கும் வம்பு கிளம்பும் என்பதால், அன்புமணியைச் சந்திக்க விஜய் மறுத்துவிட்டாராம். அதுவும் தவிர, அன்புமணி ராமதாஸுக்கு ரொம்ப முக்கியத்துவம் தந்தால், திருமா கோபித்துக் கொள்வார் என்று சொல்லப்பட்டதாம் விஜய்க்கு குதிரைக்குக் கொள்ளு, டாக்குக்கு லொள்ளு... 'தம்பி கொஞ்சம் தள்ளு'ன்னு கிடைச்ச கேப்பில் மூக்கை நுழைத்தார் கரப்ஸ்.

திருச்சி கிழக்குத் தொகுதியில் திருமா போட்டியிட வேண்டும்; திருமா துணை முதல்வர் ஆக வேண்டும்' என்று விடுதலைச் சிறுத்தைக் கட்சி தீர்மானம் போட்டிருக்கிறது. எதிர்காலத்தில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அடுத்த இடத்தில் வி.சி.க. இருக்க வேண்டும் என்று சிறுத்தையைச் சிலர் சீவி விட்டிருக்கிறார்களாம் திருமாவால் திருகுவலி உண்டாகும் பட்சத்தில், அதைச் சமாளிக்கும் பொறுப்பையும் ஆதவ்விடமே விஜய் கொடுத்துவிட்டாராம், 'பசிக்குதுன்னு சொன்னா பந்தியில இடம் கிடைக்கும்... தின்னதும் ஃபர்ஸ்ட் நைட் எனக்கா?'ன்னு கேட்டா என்ன நடக்கும்? பொத்திக்கிட்டு சிரிச்சார் பூச்சியார்.

சிகிச்சைக்காகச் சிங்கப்பூர் போன எவ்வேலு, சென்னை திரும்ப டிக்கெட் எல்லாம் போட்டுவிட்டாராம். கோட்டை வட்டாரத்தில் உள்ள அவரது ஆதரவு அதிகாரி ஒருவர் சோதனை ரொம்ப பலமாக நடந்திருக்கிறது. நீங்கள் இங்கே வந்தால் உடனே கைது' என்று தகவல் சொல்ல, பயணத்தை ரத்து செய்தாராம். வேலு, முன்ஜாமீன் வாங்கினாலும் அதை உடைக்கிற அளவுக்குப் பொதுப் பணித்துறை அமைச்சர் புயலாக இருப்பதாக வேலுவுக்குத் தகவலாம்.

உதறுனா மட்டும் உள்ள பூந்த ஓணான் ஓடிருமா என்ன? கரப்ஸுக்கு வடிவேலு' காமெடின்னா ரொம்பப் பிடிக்கும். கூட்டணிக்கட்சிகள் தயவில்லாமல் தனது முதல்வர் நாற்காலியின் நாலு காலும் சொந்தக் காலாக இருக்க வேண்டும் என்பதுதான் ஜோசப் விஜய் திட்டமாம். அதை மனதில் கொண்டு இடைத்தேர்தல் வேலை சுறுசுறுப்பாக சைலென்ட் நடந்துகொண்டிருக்கும்போது, மோடுக்குப் போயிருக்கிறது தேர்தல் ஆணையம் மத்திய ஆளுங்கட்சி, அவசரப் படேல்' என்று ஸ்பீடு பிரேக் போட்டு இருக்கிறதாம்.

கையில் கடலை இருக்கும்போது காதலிக்குக் காத்திருப்பது கஷ்டமா தெரியாது. பூச்சியாருக்குக் கொண்டைக் கடலைன்னா கொண்டாட்டம்..! தி.மு.க. தலைவரைத் தோற்கடித்த வி.எஸ் பாபு அமைச்சர் ஆகிறார், பேரவைத் தலைவர் ஆகிறார் என்றெல்லாம் ஆரம்பத்தில் செய்திகள் றெக்கை கட்டிப் பறந்தன. இன்னும் கூடத் தன்னை கவனிக்காமல் இருப்பதில் அவர் கொஞ்சம் அப்செட்டாம்! விஷயத்தை மோப்பம் பிடித்த ஆளுங்கட்சி 'உங்களுக்குச் செய்ய வேண்டியதைக் கட்சி செய்யும்' என்று வேப்பிலை அடித்திருக்கிறதாம்.

அப்படியே பந்தத்தைக் கையில கொடுத்து, கும்பத்தைத் தலையில ஏத்திட்டா, சாமி ஊர்வலத்துக்குக் கிளம்பிடும்..! கரப்ஸும் லேப் டாப்பை மூடிட்டு காராச்சேவை மென்னுக்கிட்டே கடுங்காப்பியைச் சுவைக்கத் தொடங்கினார்.