அரசியல்

ஜெ பாணியில் விஜய்? கடும் கோபத்தில் ஸ்டாலின்

By Sumalekha
09 Aug 2026, 07:15 PM
"த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் இருந்த நிலையில், தேர்தல் வாக்குறுதிகளான மகளிர் உரிமைத் தொகை 2,500, மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்தில் மகளிர் இலவச பயணம் உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகள் இடம்பெறாதது ஏமாற்றம்தான்..." என்று செல்போனில் பேசியபடியே என்ட்ரி கொடுத்த வம்புவை வெறும் கையோடு வரவேற்றார் சிஷ்யை!
"த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் இருந்த நிலையில், தேர்தல் வாக்குறுதிகளான மகளிர் உரிமைத் தொகை 2,500, மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்தில் மகளிர் இலவச பயணம் உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகள் இடம்பெறாதது ஏமாற்றம்தான்..." என்று செல்போனில் பேசியபடியே என்ட்ரி கொடுத்த வம்புவை வெறும் கையோடு வரவேற்றார் சிஷ்யை!

அவரே தொடர்ந்து, அது மட்டுமா சுவாமி? ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான நிதி மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்த பட்ஜெட் அறிவிப்பிலும் முந்தைய திமுக மற்றும் அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள்தான் இப்போதும் அறிவிக்கப்பட்டுள்ளன என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றன."

"ம்ம்... ஆனால், இப்படியும் சொல்கிறார்கள். பட்ஜெட்டில் த.வெ.க. வாக்குறுதிகளை அறிவித்தால், அது முதல்வர் விஜய்யின் அறிவிப்பாக மக்களிடம் மாஸ் காட்டாது. அதனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் 110 விதியின்கீழ் அதற்கான அறிவிப்புகளை விஜய் வெளியிட்டு ஒட்டுமொத்த தமிழக மக்களையும் ஹேப்பியாக்கும் திட்டமும் இருக்கிறது என்கிறார்கள்"

'உதயநிதி கைது விவகாரத்தால் கடந்த மூன்று மாதங்களாக சோர்ந்துகிடந்த தி.மு.க.வினர் உற்சாகமாகிவிட்டார்கள்போல?"

"உண்மைதான். உதயநிதியையும் தி.மு.க.வையும் அடக்கிவைக்க, தஞ்சாவூரில் வழக்குப் பதிவு செய்ததெல்லாம் சரிதான். ஆனால், கைது விவகாரம்தான் ஓவர் டோஸாகிவிட்டது என்கிறார்கள். மாநிலம் முழுவதும் உட்கட்சி பூசலில் முட்டிக்கொண்டிருந்த திமுக நிர்வாகிகள், உதயநிதியை கைது செய்து நீலாங்கரையில் இருந்து தஞ்சாவூர் வரை அழைத்துச் சென்ற விவகாரத்தில், உட்கட்சி பூசலை மறந்து ஓரணியில் திரண்டுவிட்டார்கள். அன்றைய நாளில் தி.மு.க. காட்டிய ஆவேச எதிர்ப்பு ஆளுங்கட்சியை யோசிக்க வைத்திருக்கிறது.

அதே நேரத்தில், 'த்ரிஷா குறித்து நான் பேசவில்லை என்று உதயநிதியும். த்ரிஷா என்ன பிரதமரா இல்லை சீஃப் மினிஸ்டரா... அவரைப் பற்றி பேசினால் இவருக்கு ஏன் கோபம் வருகிறது? என ஆர்.எஸ்.பாரதியும் ஸ்டேட்மென்ட் கொடுத்ததைப் பார்த்து ஸ்டாலின் கோபமாகிவிட்டாராம். தொடர்ந்து, 'எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் போராட்டத்தில் கவனமாக பேச வேண்டாமா? என்றும் ஸ்டாலின் கடிந்துகொண்டார் என்கிறது அறிவாலய வட்டாரம்."

"காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கவுன்ட்டவுன் கொடுக்கப்பட்டுள்ளதாமே?

‘மாமல்லபுரத்தில் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் பயிற்சி முகாமில் பங்கேற்ற ராகுல் காந்தி, மாவட்டத் தலைவர்களின் குடும்பத்தினருடன் குரூப் போட்டோவுக்கு சம்மதம் தெரிவித்ததால், அனைவரும் செம ஹேப்பி அதே நேரத்தில், 'மாவட்டத் தலைவர்கள் ஊர் திரும்பியவுடன் நிர்வாகிகள் நியமனம், பூத் கமிட்டி உறுப்பினர் நியமனம் உள்ளிட்டவற்றை முடித்து 90 நாட்களுக்குள் சரியான பட்டியலை தலைமையிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த பணியை முடிக்காதவர்கள் பதவி பறிக்கப்படும்' என வார்னிங் கொடுக்கப்பட்டிருப்பதுதால் பயிற்சி முகாமில் கலந்துகொண்ட அனைவருமே கடும் அப்செட்."

"வைகோவின் நூல் வெளியீட்டு விழா சக்ஸஸ் தானே?"

"செம சக்ஸஸ்... நாடாளுமன்றத்தில் வைகோ ஆற்றிய உரைகள் மொத்தமாக குமுதம் பு(து)த்தகம் பப்ளிகேஷனால் தொகுக்கப்பட்டு, அதன் ஆங்கில பதிப்பு நூல் வெளியீட்டு விழா டெல்லியில் நடந்தது. இந்த நிகழ்வில் முதலில் முதல்வர் விஜய் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பாதுகாப்பு ஏற்பாடு, பட்ஜெட் கூட்டத் தொடர் காரணமாக அவரது பயணம் ரத்தான நிலையில், புத்தகத்தை ராகுல் காந்தி வெளியிட, அகிலேஷ் யாதவ் பெற்றுக்கொண்டார். விழாவில் அரசியலைக் கடந்து ராகுல் காந்தி பேசியதுதான் ஹைலைட்.

முன்னதாக வைகோவின் பார்லிமென்ட் உரையில் காங்கிரஸ் குறித்தும், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி குறித்து கடுமையான விமர்சனங்கள் இருப்பதாலும், விடுதலைப்புலிகள் ஆதரவு கருத்துகள் இருப்பதாலும், புத்தக வெளியீட்டில் ராகுல் பங்கேற்கக் கூடாது என 'லாபி' செய்யப்பட்டது. ஆனால், அதை பொருட்படுத்தாத ராகுல், 82 வயதானாலும் இளைஞரைப்போல் தமிழகத்தின் நலனுக்காக தொடர்ந்து செயல்படுகிறார்' என்று வைகோவுக்கு பாராட்டு மழை பொழிந்தது ம.தி.மு.க. தொண்டர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது!"

"வைகோவும் உருகி இருப்பாரே?

"ஆமாம். ஏற்புரை ஆற்றிய வைகோ, 'புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க ராகுலை அழைத்தபோது, 'உங்கள் தந்தையை நான் கடுமையாக விமர்சித்துள்ளேன்' என்று கூறினேன். அதற்கு ராகுல், 'அது அரசியல். அதைப்பற்றி கவலைப்படாதீர்கள்' என்று கூறினார். அதுவல்லவோ பெருந்தன்மை' என உணர்ச்சிவசப்பட்டார். விழாவில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், 'நான் அமைச்சராக இல்லாவிட்டாலும், இந்தக் கூட்டத்தின் கடைசி வரிசையில் வைகோ வாழ்க என்று கோஷமிட்டு நின்றிருப்பேன்' என்று உணர்ச்சிவசப்பட, 'வைகோ வட இந்தியாவில் பிறந்திருந்தால் பிரதமராகி இருப்பார்' என திருமாவளவனும் பாராட்டு மழை பொழிய முழு விழாவும் உணர்ச்சிகரமாக இருந்திருக்கிறது!"

"வைகோவின் நீண்ட நெடிய அரசியல் வாழ்க்கைக்கு கிடைத்த அங்கீகாரம் இது. தைலாபுரத்தில் நீதி கேட்டு போராட்டம் நடந்ததாமே?"

"மகன் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. மகள் போராட்டம் தொடர்கிறது. தந்தையும், மகனும் இணைந்துவிட்டாலும், குடும்பத்தின் மூத்த வாரிசான மகள் ஸ்ரீகாந்தி இன்றைக்கும் கொந்தளிப்புடன்தான் இருக்கிறார். தானும் தன் மகன் முகுந்தனும் தனித்துவிடப்பட்ட விரக்தியில், குடும்பமாக சென்று பெரிய டாக்டரிடம் கோபமாகவே நீதி கேட்டிருக்கிறார்கள். இந்த சந்திப்பின்போது உடனிருந்த ஸ்ரீகாந்தியின் கணவரும், சம்பந்தியுமானவருக்கு போன் போட்டு எகிறியிருக்கிறார் சின்ன டாக்டர். இருவருக்கும் இடையேயான சூடான உரையாடலைக் கேட்டு மனமுடைந்த ஸ்ரீகாந்தி, 'நான் இனி தோட்டத்து பக்கமே வரமாட்டேன். எனக்கு யாருமில்லைன்னு நினைச்சுக்கிறேன்' என கண்ணீருடன் பொங்கிவிட்டு தோட்டத்திலிருந்து விருட்டென வெளியேறியிருக்கிறார். தன்னையும் தனது குடும்பத்தையும் புறக்கணித்த தந்தைக்கும் தம்பிக்கும் சரியான பாடம் புகட்ட முடிவெடுத்தே என்.ஆர். காங்கிரஸில் இணையும் முடிவுக்கு சென்றுவிட்டார் என்கிறார்கள் அவரின் நலம் விரும்பிகள்."

"என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியிடம் *ஸ்ரீகாந்தி விஜய் போனில் பேசும் வீடியோ வைரலாகி இருக்கிறதே?"

"புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி காரில் போகும்போது அவரது செல்போனில் தொடர்புகொண்ட முதல்வர் விஜய் 'பிறந்தநாள் வாழ்த்துகள் சார்' என்று கூற அதற்கு நன்றி சொன்ன ரங்கசாமி, 'நல்லா போயிட்டு இருக்கா' என்று கேட்க 'நல்லா போயிட்டுருக்கு சார் என்று விஜய் பதில் சொல்கிறார். 'நல்லா பண்ணுங்க நான் நேரில் வந்து பார்க்கிறேன்' என்று ரங்கசாமி பதில் சொல்ல இணைப்பு துண்டிக்கப்படுகிறது. இருவருக்கும் இடையேயான உரையாடல், தமிழகத்தில் உள்ள என் ஆர். காங்கிரஸ் நிர்வாகிகளை உற்சாகமடைய வைத்திருக்கிறது."

"தூத்துக்குடி நிர்வாகி நியமனத்தில் தவெகவில் புரைச்சலாமே?"

"தூத்துக்குடி தவெகவில் மாவட்ட அமைச்சர் ஒரு சமுதாயத்தையும், மாவட்டச் செயலாளர் மற்றொரு சமுதாயத்தையும் சேர்ந்தவர்கள். இதனால் கட்சி நிர்வாகிகளும் இரு கோஷ்டிகளாக பிரிந்து நிற்கிறார்கள். இதனால் தனக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லையே என்ற கவலையில் கட்சியின் தலைமை நிர்வாகியை அணுகிய அமைச்சர், தனக்கே மாவட்டச் செயலாளர் பதவியை கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால், அவரது வேண்டுகோளை தலைமை நிர்வாகி புறக்கணித்திருக்கிறார். அதனால் அப்செட்டான அமைச்சர், நண்பரான முதல்வர் கவனத்திற்கு கொண்டுசென்று தன் விருப்பத்தை சொல்லியிருக்கிறார். இதையடுத்து, அவரது விருப்பம் கிட்டத்தட்ட நிறைவேறும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதை முன்வைத்து, 'தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர் மாற்றம் உறுதி என அமைச்சர் ஆதரவாளர்கள் சவுண்டு விட அண்ணனின் பதவியைப் பறித்தால், அவரது சமுதாய பலத்தை நிச்சயம் காட்டுவார். தூத்துக்குடி த.வெ.க.வுக்கு அது நல்லதல்ல" என்கிறார்கள் மா.செ.வின் ஆதரவாளர்கள்" என்று கூறிவிட்டு சாரல் மழையில் நனைந்தவாறே கிளம்பினார் வம்பு.

- குமுதம் செய்திகளுக்காக சுவாமி வம்பானந்தா.