மிழகச் சட்டமன்றத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவரான தாரகை கத்பட்டின் இருக்கை, ஆளுங்கட்சி வரிசையிலிருந்து எதிர்க்கட்சி வரிசைக்கு மாற்றப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை வரை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அமரும் வரிசையில் அமர்ந்திருந்த தாரகை கத்பட், தற்போது எதிர்க்கட்சியினர் அமரும் முன்வரிசைக்கு மாற்றப்பட்டுள்ளார். பாமக சட்டப்பேரவைக் குழுத் தலைவரும் எம்.எல்.ஏ-வுமான சௌமியா அன்புமணியின் இருக்கைக்கு அருகே அவருக்குப் புதிய இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக இருந்த ராஜேஷ்குமார் அமைச்சர் பொறுப்பை ஏற்றதைத் தொடர்ந்து, அந்தப் பொறுப்பிற்குத் தாரகை கத்பட் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், திடீரென அவர் எதிர்க்கட்சி வரிசைக்கு மாற்றப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது.
முதலமைச்சர் விஜய்க்கு இந்தியாவின் பிரதமராகும் தகுதி உள்ளதாகத் தவெக தரப்பில் தொடர்ந்து கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மேலும், சமீபத்திய தனியார் ஊடகக் கருத்துக்கணிப்பில் விஜய் பிரதமராக வேண்டும் என 9% பேர் விருப்பம் தெரிவித்திருந்தனர்.
இருப்பினும், நாட்டின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி மட்டுமே என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. "ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் அமைச்சரவையை விட்டு விலகுவோம்" என்று அமைச்சர் ராஜேஷ்குமார் பேசிய பேச்சு ஏற்கனவே தவெக - காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த அரசியல் சூழலுக்கு மத்தியிலேயே, காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் எதிர்க்கட்சி வரிசைக்கு மாற்றப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், பேரவையில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் என்ற அடிப்படையில் தாரகை கத்பட்டின் இருக்கை மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.