அரசியல்

ராமதாஸ் - அன்புமணி சமரசம்... பலியான பா.ம.க. நிர்வாகிகள்?

By Sumalekha
07 Jul 2026, 08:00 PM
ராமதாஸ்-அன்புமணி சமரசத்தால், ராமதாஸ் தரப்பில் நின்ற சில மூத்த பா.ம.க. நிர்வாகிகள் கட்சியில் ஓரங்கட்டப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எதிரும் புதிருமாக நின்ற பா.ம.க. நிறுவனர் ராமதாஸும், தலைவர் அன்புமணியும் ஆரத்தழுவி பாசமலர்களாக மாறியதால், அவர்களின் குடும்பத்தினர் ஆனந்தக்கண்ணீர் வடிக்கிறார்கள். ஆனால், தந்தையும் மகனும் பிரிந்து நின்று மோதிக்கொண்டபோது, தந்தைக்கு ஆதரவாக நின்ற பா.ம.க. நிர்வாகிகள்தான் பாவம். தற்போது ரத்தக் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறார்கள். அதிலும், ஜி.கே. மணி, சேலம் அருளின் சோகம் தனி ரகம்.

இதுகுறித்து சேலம் மாவட்ட பாமகவின் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். "ராமதாஸூக்கும் அன்புமணிக்கும் பிரச்னை வர முக்கிய காரணமே - ஜி.கே.மணிதான். இவரின் மகன் தமிழ்க்குமரனுக்கு இளைஞரணி தலைவர் பதவியை வழங்கியபோது - அன்புமணி 'கொடுக்கக் கூடாது' என தடுத்தார். - இந்த விவகாரத்தில்தான் ஜி.கே.மணிக்கு கோபம் ஆகிவிட்டது. அன்றிலிருந்தே ராமதாஸை நேரில் - சந்திக்கும்போதெல்லாம், 'கட்சி நிகழ்வுகளில் உங்கள் படத்தை சின்னதாக போடுகிறார்கள். - அன்புமணி படத்தை பெரிதாக போடுகிறார்கள்' 1 என்று தூபம்போட்டார்.

ஜி.கே.மணியுடன் சேலம் எம்.எல்.ஏ. அருளும் கைகோத்து, ராமதாஸுக்கு நெருக்கமான தோழியின் விருப்பத்திற்கு ஏற்ப பாமகவை திமுக கூட்டணி பக்கம் நகர்த்த முயன்றனர். அதையறிந்து கோபத்தில் அன்புமணி கொந்தளிக்கவே, அப்பாவும் மகனும் நேருக்கு நேராக முட்டிக்கொள்ள பா.மக இரண்டாக உடைந்தது. அன்புமணியை எதிராகவே தரித்துக்கொண்ட முன்னாள் எம்.எல்.ஏ. அருள், ராமதாஸுக்கு தூபம் போட்டு, சேலத்தில் போட்டி பொதுக்குழுவையும் நடத்தினார்.

தொடர்ந்து அன்புமணியை கடுமையாக விமர்சனமும் செய்து வந்தார். இதன் உச்சகட்டமாகவே வாழப்பாடி வடுகத்தப்பட்டியில் அருள் மீது அன்புமணி ஆதரவாளர்கள் கொடூர தாக்குதலை நடத்த, அங்கு இரண்டு தரப்புக்கும் பெரிய கலவரமே மூண்டது. இரு அணியினரும் கையில் கிடைத்த கல், கட்டைகளை எடுத்து கொலைவெறியோடு தாக்கிக்கொண்டனர். அருள், அன்புமணி அணி மீது புகார் கொடுத்து ஒன்பது பேரை கைது செய்யவும் வைத்தார்.

அதன் பிறகும் விடாமல் டி.ஜி.பி. வரை பேசி ஏழு பாமக தொண்டர்கள் மேல் குண்டாஸ் போட முயன்றார். இதைப் பார்த்து உச்சகட்ட கோபத்திற்கு சென்ற அன்புமணி, எங்களது குடும்ப சண்டைக்கு அருளும், ஜி.கே.மணியும்தான் காரணம்' என்று பகிரங்கமாக அறிவித்ததுடன், பென்னாகரம் தேர்தல் பிரசாரத்தின்போது, 'மணி மகன் தமிழ்க்குமரன் அடையாறில் ஒரு பங்களா வச்சிருக்கார். எதுக்கு வச்சிருக்கார் தெரியுமா? என பொடி வைத்து தாக்கிப் பேசினார் அன்புமணி.

தேர்தலுக்கு முன்பாக தமது அணியில் சிலருக்கு மா.செயலாளர் பதவி கொடுத்தார் ராமதாஸ். மகுடஞ்சாவடியில் ராமதாஸ் பதவி கொடுத்த ஒருவரை வீட்டில் போய் அடித்து மிரட்டியது அன்புமணி தரப்பு. அதேபோல் செயல் தலைவர் ஸ்ரீகாந்தியையும் கீழ்த்தரமாக விமர்சித்தது அன்புமணி தரப்பு. சேலம் மாவட்டம் தாரமங்கலம், ஒமலூர் பகுதிகளில் ராமதாஸ் தரப்பு அணிகளை சேர்ந்தவர்கள் ஃபேஸ்புக்கில் அன்புமணி குறித்து பதிவு போட்டால் உடனே அன்புமணி தரப்பு ஆட்கள் பகிரங்கமாகவே கொலை மிரட்டல் விடுத்தனர். இந்தவகையில் அன்புமணி தரப்பால் பாதிக்கப்பட்டவர்கள் சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமானோர் இருக்கிறார்கள்.

இந்தநிலையில் அப்பா மகன் திடீர் சந்திப்பை பார்த்த அருள் தரப்பு கடுமையான அதிருப்தியில் இருக்கிறது. 'இனி இங்கே இருந்தா மகன் அரவணைக்கமாட்டார். அப்பா தரப்பு இனி நம்மள கண்டுக்காது. எனவே வேறு கட்சியில் நிழல் தேடி ஒதுங்கலாம்' என்ற முடிவில் இருக்கிறார் அருள். ராமதாஸ் தரப்பு ஆட்கள் பலரும் அப்படியே ஆஃப் ஆகிவிட்டனர். அன்புமணி தரப்பு கையே இனி ஓங்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் பழைய கட்சி ஆட்கள் எல்லாம் இனிமேல் இவர்களை நம்பி வேலை செய்ய தயாராக இல்லை. கீழ்மட்ட நிர்வாகிகளை அடித்துக்கொள்ள சொல்லிவிட்டு இப்போது இவர்கள் இருவரும் சேர்ந்து கட்டிப்பிடித்து நாடகம் ஆடுகிறார்கள்.

அதுவும் ஜி.கே.மணி, அருள், தருமபுரி சரவணன், கரூர் பாஸ்கரன் ஆகிய நான்கு பேருக்கும் தனது தலைமையிலான பா.ம.க.வில் எப்போதும் இடமே இல்லை என்று கறாராக கூறியிருக்கிறார் அன்புமணி. அதேபோல அவர்களுக்கு நெருக்கமானவர்களும் வேண்டாம். மீதி யார் வந்தாலும் சேர்த்துக்கொள்ளுங்கள்' என உத்தரவே போட்டிருக்கிறார் அன்புமணி, ராமதாஸை ஆதரித்து நின்றதால், பாமகவில் தங்கள் அத்தியாயம் முடிவுக்கு வந்துவிட்டதாகவே அந்த நான்கு நிர்வாகிகளும் முடிவுக்கு வந்துவிட்டனர்.

இதன் காரணமாகவே சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் அன்புமணியை எதிர்த்து அரசியல் செய்தவர்கள் அன்புமணியின் தலைமையை ஏற்பது கேள்விக்குறிதான். சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக ராமதாஸுடன் இணைந்து பணியாற்றியவர்கள் மாற்றுக் கட்சியை தேடுவதுதான் பெரும் துயரம்' என்று சொல்லி முடித்தார்கள்.

இதுதொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ. அருளிடம் விளக்கம் பெற தொடர்புகொண்டபோது, அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆகி இருந்தது. ஜி.கே.மணியிடம் பேச முயன்றோம். அழைப்பை எடுத்த அவரது உதவியாளர், "ஐயாவை லைனில் வரச்சொல்லுகிறேன்" என்றார். ஆனால் அவர் வரவே இல்லை.

அன்புமணி தரப்பு முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக்கிடம் பேசினோம். 'அன்புமணியை ஏத்துக்கிட்டு வந்தால் ஏற்றுக்கொள்ள போகிறோம். சின்ன சின்ன சண்டைதான். எல்லாம் சரியாகிவிடும். சேலத்தில் எல்லாம் வந்திடுவாங்க. அடுத்த வாரத்தில் எல்லோரையும் சந்திக்கப் போகிறோம். விரைவில் இணைந்து செயல்படுவோம்" என்றார்.

இவங்க சண்டைக்கு அவங்கள ஊறுகாய் ஆக்கிட்டாங்களே!