அரசியல்

ராகுல்-விஜய் CAFE மீட் அப்... 10 நிமிட டிஸ்கஷன்... யாருடைய ஹோட்டல்னு தெரியுமா?

By Christon
10 Oct 2026, 04:49 PM
சென்னை பாலவாகத்தில் உள்ள பிரபல கஃபேவில் ராகுல் காந்தியுடன் ஒன்றாக அமர்ந்து முதலமைச்சர் விஜய் காபி குடிக்க சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை வந்தடைந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முதலமைச்சர் விஜய்யை அவரது இல்லத்தில் சந்தித்ததைத் தொடர்ந்து, இருவரும் ஒரே காரில் பயணித்து பாலவாக்கத்தில் உள்ள உணவகத்தில் காபி அருந்தியபடியே ஆலோசனை நடத்திய சம்பவம் அரசியல் களத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

நீலாங்கரை இல்லத்தில் மதிய உணவு விருந்து

மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகப் பிற்பகல் சென்னை வந்தடைந்த ராகுல் காந்திக்குக் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்திலிருந்து நேரடியாக நீலாங்கரையில் உள்ள முதலமைச்சர் விஜய் இல்லத்திற்குச் சென்ற ராகுல் காந்திக்குத் சுவையான மதிய உணவு விருந்து அளிக்கப்பட்டது.

உணவிற்குப் பிறகு, நிர்வாகிகள் யாரும் இன்றி இருவரும் தனியாக சுமார் 1 மணி நேரம் முக்கிய அரசியல் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

தோனியின் கஃபேவில் ராகுல் - விஜய்!

ஆலோசனைக்குப் பிறகு, இருவரும் ஒரே காரிலேயே புறப்பட்டனர். காரின் பின் இருக்கையில் இரு தலைவர்களும் தீவிரமாக உரையாடியபடி பயணித்த காட்சிகள் வெளியாகின.

அதனைத் தொடர்ந்து, பாலவாக்கத்தில் உள்ள பிரபல கஃபே ஒன்றிற்கு இருவரும் சென்றனர். இந்த உணவகம் கிரிக்கெட் ஜாம்பவான் எம்.எஸ். தோனிக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது. அங்கு காபி (cappuccino) அருந்தியபடியே இரு தலைவர்களும் சுமார் 10 நிமிடங்கள் வரை சுவாரஸ்யமாகத் தங்கள் ஆலோசனையைத் தொடர்ந்தனர்.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, ராகுல் காந்தி இன்று மாலை சென்னை தீவுத்திடலில் நடைபெறும் பிரம்மாண்ட மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.