அரசியல்

"நாங்கலாம் SOFA வாங்ககூடாதா? " - திமுகவிற்கு வன்னியரசு பதிலடி!

By Sumalekha
31 Aug 2026, 10:55 AM
சோஃபா விவகாரம் குறித்து பேசிய அமைச்சர் வன்னி அரசு, ‘நாங்க சோஃபா வாங்கக்கூடாதா?’ என கேள்வி எழுப்பி அரசியல் விவாதத்தை கிளப்பியுள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற மீலாதுந் நபி விழாவில் கலந்து கொண்டு பேசிய சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, அரசியல் விமர்சனங்கள் மற்றும் "சோஃபா" விவகாரம் குறித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

மயிலாப்பூரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் சீர்மை பதிப்பகம் சார்பில் 1501-வது மீலாதுந் நபி விழா நடைபெற்றது. இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பாஜகவை விட விசிக-வை அதிகம் விமர்சிக்கிறார்கள்! :

விசிகவை குறிவைக்கும் விமர்சனங்கள் குறித்து பேசிய அமைச்சர் வன்னி அரசு, "தற்போது திமுகவினர் மற்றும் திமுக ஆதரவாளர்கள், பாஜகவை விமர்சிப்பதை விட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அதிகமாக விமர்சித்து வருகின்றனர்" என தெரிவித்தார்.

"விசிக என்ன செய்கிறது, கட்சித் தலைவர் என்ன கருத்து தெரிவிக்கிறார், எந்த விவகாரத்தில் யார் கைது செய்யப்பட்டார்கள் போன்ற விஷயங்கள் குறித்து தொடர்ந்து கவனம் செலுத்தப்படுகிறது. ஆனால், அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள நாங்கள் மக்களுக்காக மேற்கொள்ளும் பணிகள் மற்றும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பேச வேண்டிய பொறுப்பு உள்ளது" என்றும் அவர் கூறினார்.

பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொடர்பான அரசியல் நிலைப்பாடு குறித்து பேசிய வன்னி அரசு, "அந்த அமைப்புகளை விமர்சிப்பது மட்டுமே எங்களுடைய முழுநேர அரசியல் அல்ல. அவற்றின் செயல்பாடுகள் மக்கள், அரசியல் மற்றும் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை புரிந்து கொண்டு செயல்படுவது முக்கியம். மக்கள் உரிமை, சமத்துவம், சமூகநீதி, ஜனநாயகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே எங்களுடைய அரசியல் பயணம் தொடரும்" என்றார்.

நாங்கலாம் சோபா வாங்கக்கூடாதா? :

சோஃபா விவகாரம் குறித்து பேசிய அவர், "சட்டசபையில் சோஃபா என்று சொன்னாலே பேசக்கூடாது என்று கூறுகிறார்கள். நாங்கள் சோஃபா வாங்கக்கூடாதா? எல்லோருக்கும் சோஃபா இருக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல். நீங்கள் மட்டும் தான் சோஃபா வைத்திருக்க வேண்டுமா?" என கேள்வி எழுப்பினார்.

மேலும், "திமுகவினர் பாஜகவை விமர்சிப்பதை விட விசிகவை அதிகமாக விமர்சிக்கிறார்கள். இந்த அரசியல் எதை நோக்கி செல்கிறது?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

என்ன இந்த சோஃபா விவகாரம்? :

2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் அரசியல் கூட்டணி தொடர்பான பேச்சுகள் தீவிரமடைந்த காலகட்டத்தில், விசிக அலுவலகத்திற்கு சோஃபா ஒன்று வந்ததாக தகவல்கள் வெளியானது.

இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் மற்றும் விசிக இடையே கூட்டணி தொடர்பான அரசியல் பேச்சுகள் நடந்ததாக சிலர் விமர்சனங்களை முன்வைத்தனர். இதன் காரணமாக "சோஃபா மாடல் அரசு" என்ற விமர்சனமும் அரசியல் களத்தில் பேசப்பட்டது.

ஆனால், விசிக தரப்பில் அந்த சோஃபா ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்டிருந்ததாகவும், அது வந்த நேரத்துக்கும் அரசியல் கூட்டணி முடிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

தற்போது அமைச்சர் வன்னி அரசு மீண்டும் சோஃபா விவகாரத்தை குறிப்பிட்டு பேசியிருப்பது, தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.