'தமிழக பா.ஜ.க.வில் பலருக்கும் தேச பக்தியோ, தெய்வீக பக்தியோ கிடையாது, பிரதமர் மோடியின் புகழை வைத்து பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில், சமூகவிரோத செயல்களில்தான் ஈடுபட்டுவருகிறார்கள். அதனால், ஒட்டுமொத்தமாகவே தமிழக பா.ஜ.க.வை சீரமைக்க வேண்டும்' என பா.ஜ.க.வின் மேலிடப் பார்வையாளர் ராம் மாதவ், அகில இந்திய தலைமையிடம் அளித்திருக்கும் சீக்ரெட் ரிப்போர்ட் தான். அக்கட்சியின் மாநிலப் புள்ளிகளை பீதியில் ஆழ்த்தியிருக்கிறது.
தமிழக பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளர்களாக பதவி வகித்துவந்த அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி ஆகியோர் மாற்றப்பட்டு, கடந்த செப்டம்பர் 23ம் தேதி, புதிய பொறுப்பாளராக அக்கட்சியின் மூத்த தலைவர் ராம் மாதவ் அறிவிக்கப்பட்டார். கூடவே. அவருக்கு உதவ இணை பொறுப்பாளராக நிர்மல் குமார் சுரானா, டி.கே. அருணா நியமிக்கப்பட்டனர். இந்த மூவர் அணியும் உடனடியாக தமிழகத்திற்கு வந்து சென்னை தி.நகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தியது. இந்தக் கூட்டத்திற்கு பின்னர் டெல்லி திரும்பிய ராம் மாதவ், அகில இந்திய பா.ஜ.க. தலைவர் நிதின் நபினிடம் ரகசிய அறிக்கை ஒன்று கொடுத்துள்ளதாகவும், அதில் தமிழக பா.ஜ.கவின் தற்போதைய செயல்பாடுகள் பற்றி, கடும் நெகட்டிவ்வான விஷயங்களை குறிப்பிட்டுள்ளதாகவும் கசிந்துள்ள தகவல்கள்தான் தமிழக பா.ஜ.க.வில் புயலைக் கிளப்பியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத்திடம் பேசினோம். 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழகத்தில் ஒரு இடத்தில்கூட பா.ஜ.க வெற்றிபெறாததும், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே பா.ஜ.க. வெற்றிபெற்றதும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மேலிடத் தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இதையடுத்தே, தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்த தேசிய அளவில் மூத்த தலைவரான ராம் மாதவ்வை மேலிடம் அனுப்பிவைத்திருக்கிறது.
அவரைப் போலவே, இணைப் பொறுப்பாளரான நிர்மல் குமார் சுரானாவும் திறமைவாய்ந்தவர். புதுச்சேரி பொறுப்பாளராக இருந்த அவர், அங்கு கட்சிக்கு ஏற்பட்ட சவால்களை முறியடித்து வெற்றிகரமாக கூட்டணி ஆட்சி அமைய கடுமையாக உழைத்தவர். அதேபோல அருணாவும் திறமையானவர்தான். இந்த மூவர் அணியினர், மேலிடத் தலைவர்களின் கட்டளைக்கு ஏற்ப செயல்பட்டு, மேற்கு வங்கம் போலவே தமிழகத்திலும் பாஜக ஆட்சி அமைக்கும் கனவை நிறைவேற்றுவார்கள்.
கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளாக தமிழக பா.ஜ.க.வுக்கு தலைமை வகித்தவர்கள், கோஷ்டி அரசியலில்தான் அதிக கவனம் காட்டினார்கள். கட்சி வளர்ச்சிக்காக உண்மையாக உழைத்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்காமல், தனிப்பட்ட முறையில் விசுவாசிகளாக இருந்தவர்களுக்கு கட்சிப் பதவிகளை வாரி வழங்கினார்கள். அதுபோன்ற தில்லுமுல்லுவை மூவர் குழு ஒருபோதும் அனுமதிக்காது.
இதைவிட முக்கியமானப் பிரச்னை, பிரதமரின் தமிழக வருகையின்போது நடைபெற்ற முறைகேடுகளுக்கும் மூவர் அணி எதிர்காலத்தில் முற்றுப்புள்ளி வைத்துவிடும் என்று மண்டல, மாவட்டத் தலைவர்கள் நம்பிக்கையோடு கூறுகிறார்கள். அதாவது, கடந்த பல ஆண்டுகளாகவே பிரதமர் மோடி தமிழகம் வரும்போதோ அல்லது புறப்பட்டு செல்லும்போதோ மண்டலத் தலைவர்கள், மாவட்டத் தலைவர்களை அறிமுகப்படுத்தாமல் லட்சக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு செல்வந்தர்கள் பலரை பிரதமரை வரவேற்க அனுமதித்த செயல்களுக்கு ராம் மாதவ் டீம் வருங்காலத்தில் இடமளிக்காது. இப்படியாக, ராம் மாதவ் தலைமையிலான டீம், தமிழக பா.ஜ.கவை ஒட்டுமொத்தமாக சீரமைக்காமல் மீண்டும் டெல்லி திரும்பமாட்டார்கள் என்பது உறுதி" என சொல்லி முடித்தார்.
தமிழக பா.ஜ.க.வில் என்ன நடக்கிறது? மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் பேசினோம். “இந்தியாவிலேயே பா.ஜ.க வளர்ச்சி மிகவும் மோசமாக உள்ள மாநிலம் தமிழகம் மட்டுமே. கேரளாவில்கூட தனித்து நின்ற பா.ஜ.க., மூன்று எம்.எல்.ஏ.க்களை பெற்றிருக்கிறது. ஆனால், தமிழகத்தில் கூட்டணியில் போட்டி யிட்ட போதும் ஒரு இடத்தில்தான் வெற்றி கிடைத்திருக்கிறது. முக்கிய தலைவர்கள் மூன்றாம் இடத்திற்கு சென்றதெல்லாம் பிரதமரை மிகவும் வருத்தப்படச் செய்திருக்கிறது.
அதனால், தமிழக பா.ஜ.கவை சீரமைக்கும் பணியை மோடியே நேரடியாக எடுத்துக்கொண்டு ராம் மாதவ்வை நியமித்திருக்கிறார். அவர் மிகவும் கண்டிப்பானவர் என்பதுடன். தவறு செய்பவர்கள்மீது கருணையே காட்ட மாட்டார். தமிழக பா.ஜ.க.விற்குள் பண விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றிருக்கிறது என்ற புகாரை அவர் தோண்டி துருவி விசாரித்து வருகிறார். அவரது விசாரணையில் தவறு செய்த தமிழக பாஜகவினர் யாரும் தப்பவே முடியாது" என்றார்.
தொடர்ந்து, ஆந்திர மாநில பாஜக மேலிட இணை பார்வையாளரான வானதி சீனிவாசனிடம் பேசினோம். 'ராம் மாதவ் மேலிடத்திற்கு அறிக்கை கொடுத்திருப்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. மேலிடப் பொறுப்பாளர்களின் பணி என்பதே, மாநிலக் கட்சியை வலுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்வதும், நிர்வாகிகளுக்கு வழிகாட்டுவதும், ஒருங்கிணைத்து கட்சிப் பணிகளை வேகப்படுத்துவதும்தான். மேலிட நம்பிக்கையை மூவர் அணி நிச்சயம் நிறைவேற்றும்" என்றார்.
நிறைவாக, தமிழக பா.ஜ.க. தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். மேலிடப் பார்வையாளர்கள் சென்னைக்கு வந்து ஒருநாள் மட்டுமே இருந்தார்கள். அந்த ஒருநாளில் அவர்கள் பலரிடம் விசாரித்து மேலிடத்திற்கு அறிக்கை கொடுத்திருக்கிறார்கள் என்று சொல்வது வெறும் வதந்திதான். தேர்தல் நிதி முறைகேடு, பிரதமருடனான சந்திப்பில் குளறுபடி போன்ற குற்றச்சாட்டுகளுக்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. ஒவ்வொரு தேர்தலின்போதும் நிதியை கையாள்வதற்கென ஒரு குழு நியமிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் முக்கியமாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், தமிழக தேர்தல் பொறுப்பாளராகவும் இருந்தார். அவர் தமிழகத்தில் முழுமையாக இருந்து கண்காணித்திருக்கிறார். அதனால், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அபாண்டம்" என்றார்.
உண்மையை நீண்ட நாட்கள் மூடிவைக்க முடியாது!
- குமுதம் செய்திகளுக்காக தாரை இளமதி.