அரசியல்

அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு.. பாஜக தலைமை அறிவிப்பு!

By Christon
05 Jun 2026, 11:34 AM
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அளித்த ராஜினாமா கடிதத்தை அக்கட்சியின் தேசியத் தலைமை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளது.
பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அளித்த ராஜினாமா கடிதத்தை அக்கட்சியின் தேசியத் தலைமை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளது.

ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வுபெற்று பாஜகவில் இணைந்த அண்ணாமலை, கடந்த 2021-ஆம் ஆண்டு அக்கட்சியின் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றார். திமுக அரசுக்கு எதிரான போர்க்கொடி, 'என் மண் என் மக்கள்' நடைபயணம் ஆகியவற்றின் மூலம் தமிழக மக்களிடையே அவர் பரவலான கவனத்தைப் பெற்றிருந்தார். எனினும், கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்த சூழலில், அவர் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து மாற்றப்பட்டு நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். தேர்தலில் தான் கேட்ட தொகுதி ஒதுக்கப்படாததால் போட்டியிடாமல் பிரசாரத்தில் மட்டுமே ஈடுபட்ட அண்ணாமலைக்கும், கட்சித் தலைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நீடித்து வந்தன.

டெல்லி பயணம் மற்றும் ராஜினாமா

இந்நிலையில் டெல்லி சென்ற அண்ணாமலை, பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீனைச் சந்தித்துத் தனது ராஜினாமா கடிதத்தையும், சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்த அறிக்கையையும் சமர்ப்பித்தார். தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் நேரில் சந்தித்துத் தனது முடிவு குறித்து அவர் விளக்கமளித்தார். அண்ணாமலையைச் சமாதானப்படுத்த பாஜக தலைமை மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, தற்போது அவரது ராஜினாமா கடிதத்தை தேசியத் தலைவர் நிதின் நவீன் ஏற்றுக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியல் கட்சி

பாஜகவிலிருந்து விலகியுள்ள அண்ணாமலை, 'மக்கள் சக்தி இயக்கம்' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கவுள்ளதாகக் கடந்த ஒரு வாரமாகத் தகவல்கள் வெளியாகி வந்தன. இதுதொடர்பாகத் தனது தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் இன்று பகல் 12 மணியளவில் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு புதிய கட்சி தொடங்குவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.