பா.ஜ.க மேலிடத் தலைவர்களுடனான பேச்சுவார்த்தைக்குப் பின், பா.ஜ.க-விலிருந்து விலகுவதற்கான தனது ராஜினாமா கடிதத்தைத் தேசியத் தலைவர் நிதின் நபினிடம் அண்ணாமலை அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பா.ஜ.க மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். அண்ணாமலைக்குத் தேசியப் பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்ட போதிலும், அவருக்குச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அதிமுகவிடம் சிங்காநல்லூர் தொகுதியை பா.ஜ.க கேட்டது.
ஆனால், அந்த கோரிக்கையை அதிமுக நிராகரித்ததால் அவர் அதிருப்தியில் இருந்து வந்தார். பா.ஜ.க-வில் உரிய அங்கீகாரம் வழங்கப்படாததால் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க வேண்டும் என அவரது தொண்டர்கள் வலியுறுத்தி வந்த சூழலில், தனியாகக் கட்சி தொடங்க உள்ளதாகத் தகவல்கள் பரவின.
இந்த அரசியல் பரபரப்புக்கு இடையே, பா.ஜ.க டெல்லி மேலிடம் விடுத்த அழைப்பை ஏற்று, தேசியத் தலைவர் நிதின் நபின் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்திப்பதற்காக அண்ணாமலை நேற்று சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார்.
டெல்லியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருக்கும் அவர், இன்று (ஜூன் 02) பா.ஜ.க தேசியத் தலைவர் நிதின் நபினை நேரில் சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்பின் போது, பா.ஜ.க-வின் அனைத்துப் பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதற்கான தனது ராஜினாமா கடிதத்தை அண்ணாமலை கட்சித் தலைமையிடம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, அவர் தனது பிறந்தநாளான ஜூன் 4 ஆம் தேதி புதிய கட்சியை அறிவிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.