திமுக ஐடி விங் சமூக வலைதளத்தில் கடந்த ஜூன் 8-ம் தேதி தன்னை தொடர்புபடுத்தி போதைப்பொருள் கடத்தல் குறித்த அவதூறு தகவலை பதிவிட்டதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். அந்தப் பதிவை லட்சக்கணக்கானோர் பார்த்ததாகவும், ஆயிரக்கணக்கானோர் பகிர்ந்து, விருப்பம் தெரிவித்ததாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்ட ஜான் பிரிட்டோ என்பவர் தனது உறவினர் இல்லை என்றும், இதுதொடர்பாக அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில் வெளியிடப்பட்டதாகவும், திமுகவின் சமூக வலைதள கணக்கு என்பதால் அதற்கு ஸ்டாலின் பொறுப்பு எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஏ.பி.சூரிய பிரகாசம் ஆஜராகி வாதிட்டார். வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுவுக்கு வரும் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக தகவல் தொடர்பு குழுவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், சர்ச்சைக்குரிய பதிவை சமூக வலைதளத்தில் இருந்து நீக்கவும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.