இந்தியா

டெல்லியில் 2-வது நாளாக போராட்டம்.. ராகுல் காந்தி மீண்டும் கைது!

By Christon
07 Oct 2026, 06:53 PM
தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரை நோக்கி பேரணியாக சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி 'இந்தியா' கூட்டணி எம்பிக்கள் டெல்லியில் 2-வது நாளாக நடத்திய தீவிரப் போராட்டத்தின் போது, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களைக் காவல்துறையினர் மீண்டும் கைது செய்துள்ளனர்.

நேற்று அகில இந்திய வானொலி நிலைய வளாகத்தில் நடந்த போராட்டத்தைத் தொடர்ந்து, இன்று மதியம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஏற்பாடு செய்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, 'இந்தியா' கூட்டணி எம்பிக்கள் பேருந்துகள் மூலம் ஜந்தர் மந்தர் நோக்கிப் புறப்பட்டனர்.

ஆனால், முன்அனுமதி பெறவில்லை என்று கூறி ஜந்தர் மந்தர் செல்லும் பாதைகளை டெல்லி காவல்துறை முட்கம்பிகளால் மறித்தது. பேருந்துகளில் இருந்து கீழே இறங்கிய தலைவர்கள், சாலையிலேயே அமர்ந்து முழக்கங்களை எழுப்பி தர்ணாவில் ஈடுபட்டனர்.

சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர். ஆனால், அவர்கள் நகர மறுத்ததால், இருவரையும் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று காவல் வாகனத்திற்குள் ஏற்றினர்.

முன்னதாக நேற்றைய போராட்டத்தின் போது அனுமதியின்றி கட்டிடத்திற்குள் நுழைந்ததாக ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதுகுறித்துப் பேசிய ராகுல் காந்தி, "என் மீது ஏற்கனவே 45 வழக்குகள் உள்ளன, அதை 100 ஆக மாற்றுவதே என் இலக்கு" எனத் தெரிவித்தார்.

ஜந்தர் மந்தர் நோக்கிச் செல்வதற்கு முன்பாகப் பேசிய ராகுல் காந்தி, நாட்டின் ஜனநாயகத்தை பிரதமர் மோடியும், அமித் ஷாவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரும் சீரழித்துவிட்டதாகக் குற்றம்சாட்டினார்.

300 எம்பிக்கள் வரை தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்திக்க முயன்றும் அனுமதி மறுக்கப்படுவதாகவும், இந்த 'வாக்குத் திருட்டு' விவகாரத்தை நேரடியாக மக்களிடம் கொண்டு சென்று தொடர்ந்து போராட்டம் நடத்தப்போவதாகவும் 'இந்தியா' கூட்டணித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.