டெல்லியின் மாளவியா நகர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று காலை நேரிட்ட பயங்கரத் தீ விபத்தில் சிக்கி, குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மீட்கப்பட்டுள்ள நிலையில், அங்குத் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
டெல்லியின் மாளவியா நகர், ஹவுஸ் ராணி பகுதியில் உள்ள குறுகலான பாதையில் 'மிகாசா இன்' (Micasa Inn) என்ற ஐந்து அடுக்கு ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இதன் அடித்தளத்தில் (Basement) ஒரு உணவகமும் அமைந்துள்ளது. இன்று காலை சுமார் 8.50 மணியளவில் இந்த ஹோட்டல் உணவகத்தில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவெனப் பரவியதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் இரண்டு வாட்டர் என்ஜின்கள் மற்றும் பிற தீயணைப்பு வாகனங்களுடன் வந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
விபத்து நடந்த சமயத்தில் அந்த ஐந்து அடுக்குக் கட்டிடத்தில் சுமார் 40 பேர் இருந்ததாக நம்பப்படுகிறது. இந்த ஹோட்டலில் மொத்தம் 25 அறைகள் உள்ள நிலையில், தங்கியிருந்தவர்களில் பெரும்பாலானோர் மருத்துவச் சிகிச்சைக்காக இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டுப் பிரஜைகள் ஆவர். காலை நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டபோது ஹோட்டலில் தங்கியிருந்த பலரும் தூங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. கட்டிடம் முழுவதும் தீ பரவியதால், அங்கிருந்த சிலர் தப்பிப்பதற்காகக் கட்டிடத்தின் மேலிருந்து கீழே குதிக்கும் அதிர்ச்சியூட்டும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. தீ விபத்துக்கான துல்லியமான காரணம் இன்னும் முழுமையாகக் கண்டறியப்படவில்லை.
இந்தத் தீ விபத்து குறித்து அந்த ஹோட்டல் உணவகத்தின் சமையல்காரரான கேசர் சிங் விவரிக்கையில், "காலை 8:00 மணியளவில் நான் அங்குள்ள மின்சார அடுப்பை (Electric stove) ஆன் செய்ய முயன்றேன். அப்போது திடீரெனத் தீப்பிழம்புகள் எழும்பின. ஹோட்டல் முழுவதும் தீ பரவியிருப்பதை நான் உணர்ந்தேன். உடனே எனது உதவியாளரை எச்சரித்துவிட்டு, நான் எப்படியோ வெளியேறித் தப்பித்துவிட்டேன்" என்று அந்தத் திகிலூட்டும் தருணத்தைக் கூறினார். இந்த விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.