சினிமா

மீண்டும் இணையும் ஜோடி? விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு கடந்து வந்த பாதை..!

By Sumalekha
07 Aug 2026, 04:30 PM
முதலமைச்சர் விஜய் - சங்கீதா திருமண வாழ்க்கை தொடர்பாக கடந்த சில மாதங்களாக பேசப்பட்டு வந்த விவாகரத்து விவகாரம், தற்போது எதிர்பாராத திருப்பத்தை சந்தித்துள்ளது. விவாகரத்து கோரி சங்கீதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் நீண்ட நாட்களாக கவனம் பெற்ற இந்த வழக்கில் புதிய கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக, மனுவை வாபஸ் பெறும் அளவுக்கு இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதா? அல்லது இதற்குப் பின்னால் வேறு சட்டரீதியான காரணங்கள் உள்ளதா? என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

25 ஆண்டுகளைக் கடந்த திருமண வாழ்க்கை:

விஜய்யும் சங்கீதாவும் கடந்த 1998-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். விஜய்யின் திரையுலகப் பயணத்தின் முக்கியமான காலகட்டங்களில் அவரது மனைவி சங்கீதா பொது நிகழ்ச்சிகளில் அவ்வப்போது கலந்து கொண்டுள்ளார்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அவரது பொதுவெளி வருகை குறைந்தது. இதையடுத்து இருவரது குடும்ப வாழ்க்கை குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கின. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும், சங்கீதா வெளிநாட்டில் வசித்து வருவதாகவும் பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவின.

விஜய் அரசியலில் களமிறங்கிய பிறகும், கட்சி சார்ந்த நிகழ்வுகள் மற்றும் அவரது கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ தொடர்பான நிகழ்ச்சிகளில் சங்கீதா இடம்பெறாதது கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியது.

நீதிமன்றத்தை நாடிய சங்கீதா:

இந்தச் சூழலில், கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி சங்கீதா சார்பில் செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்தார் சங்கீதா. சுமார் 27 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

மேலும்,நடிகையுடன் தொடர்பு, திருமண வாழ்க்கையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் பிரச்னைகள், மன உளைச்சல் உள்ளிட்ட காரணங்களையும் சங்கீதா தரப்பு மனுவில் குறிப்பிட்டிருந்ததாக செய்திகள் வெளியாகின. அதேநேரம், வழக்கு தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் ஊகங்கள் மற்றும் விவாதங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்றும் சங்கீதா தரப்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

முதலில் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு பின்னர் குடும்பநல நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கின் விசாரணையில் இரு தரப்பினரின் ஆஜர், வழக்கறிஞர் வக்காலத்து மற்றும் காணொளி வாயிலான விசாரணை உள்ளிட்ட நடைமுறை விவகாரங்கள் குறித்து நீதிமன்றம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது.

குடும்ப நல வழக்குகளில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் சமரச முயற்சிகளையும் நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால், வழக்கு எவ்வாறு நகரும் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து நீடித்தது.

ஆகஸ்ட் 7 விசாரணையில் என்ன நடந்தது?

இந்த நிலையில், இன்று(ஆகஸ்ட் 07) வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விஜய் தரப்பில் விசாரணையை மற்றொரு நாளுக்கு மாற்றக் கோரிக்கை வைக்கப்பட்டது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் முதலமைச்சர் விஜய்யால் நேரில் ஆஜராக முடியாத நிலை இருப்பதாக அவரது தரப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மறுபுறம், சங்கீதா காணொளி வாயிலாக விசாரணையில் பங்கேற்றதாகவும், வழக்கை இன்றே விசாரிக்க வேண்டும் என அவரது தரப்பு கோரியதாகவும் தகவல் வெளியானது. இதற்கிடையேதான் இந்த வழக்கில் முக்கியமான மாற்றம் ஏற்பட்டுள்ளது.

திடீரென வாபஸ் ஏன்?

விவாகரத்து கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை சங்கீதா தற்போது திரும்பப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல மாதங்களாக நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொண்டு வந்த வழக்கில் திடீரென இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனு வாபஸ் பெறப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளிப்படையாக தெரியவில்லை. இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதா, குடும்ப வாழ்க்கையைத் தொடரும் முடிவுக்கு சங்கீதா வந்துள்ளாரா அல்லது வழக்கை வாபஸ் பெற்றதற்குப் பின்னால் வேறு சட்ட காரணங்கள் இருக்கிறதா என்பது குறித்தும் அதிகாரப்பூர்வமான விளக்கம் வெளியாக வேண்டியுள்ளது.

மீண்டும் இணைகிறார்களா விஜய் - சங்கீதா?

மனுவை வாபஸ் பெற்றிருப்பது, இருவரும் மீண்டும் இணைந்து வாழ்கிறார்கள் என்பதற்கு நேரடி உறுதிப்படுத்தலாக கருத முடியாது. அதேவேளையில், விவாகரத்து நடவடிக்கையில் இருந்து சங்கீதா பின்வாங்கியிருப்பது அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.

இத்தனை ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு நீதிமன்றம் வரை சென்ற விவகாரம் தற்போது புதிய திருப்பத்தை பெற்றுள்ள நிலையில், விஜய் - சங்கீதா உறவில் உண்மையில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது? என்பதுதான் அடுத்தடுத்த நாட்களில் முக்கியமாக எதிர்பார்க்கப்படும் கேள்வியாக உள்ளது.