நடிகை, திரைப்படத் தயாரிப் பாளர், அரசியல்வாதி, நல்ல குடும்பத் தலைவி, குழந்தைகளை நேசிக்கும் அம்மா என பல பரிமாணங்களைக் கொண்ட குஷ்பு, சமீபத்தில் 'மாமியார்' என்னும் புதிய அவதாரத்தையும் ஏற்றிருக்கிறார். அவரது மூத்த மகளான அவந்திகா சுந்தருக்கு சமீபத்தில் கோவாவில் திருமணம் கோலா கலமாக நடந்தது. இந்திய சினிமா நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்திய பூரிப்பு இன்னும் குஷ்புவிடம் குறையவே இல்லை. அப்படி ஒரு மகிழ்ச்சி யில் இருந்தவரை சந்தித்து உரையாடியதிலிருந்து...
மூத்த மகளுக்கு திருமணம் முடிந்தது. ஓர் அம்மாவாக உங்களின் மனநிலை எப்படி இருக்கிறது?
பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்களுக்கு தன் பிள்ளைகளின் தேவைகளை, பொறுப்புகளை, எதிர்கால விஷயங்களை செய்து செய்து தருவது தலையாய கடமை எனக்கு ரெண்டு பெண் பிள்ளைங்க. அவங்களோட 25 வது வயது வரைக்கும் திருமணம் பற்றி யோசிக்கவே கூடாது என்பதில் தெளிவா இருந்தேன்; அவங்ககிட்டயும் அதைச் சொல்லி யிருந்தேன். இப்போ மூத்த மகள் அவந்திகாவுக்கு 26 வயது. திருமணத்துக்கு சரியான நேரம். மாப்பிள்ளையும் சரியா அமையவே உடனே பேசி திருமணத்தை முடிச்சிட்டோம். இப்போ எங்களுக்கு ஒரு மகனும் கிடைச்சிருக்காருன்னு நினைக்கிறேன்.
நீங்களும், உங்கள் கணவர் சுந்தர்.சி இருவருமே சினிமாத்துறையில் இருக்கிறீர்கள். உங்கள் இருவருக்குமான புரிதலை பலரும் பாராட்ட என்ன காரணம்?
"எனக்கும் சுந்தர்.சிக்கும் திருமணமாகி 32 வருஷம் ஆகிடுச்சு. இப்போ வரைக்கும் அவர் என்ன படம் பண்ணப் போறாரு, அது என்ன கதை எப்போ தொடங்குதுன்னு நான் கேட்டதே இல்ல. அதே மாதிரி, என்னையும் அவர் எதுவும் கேட்டதில்லை. அதுமட்டுமில்ல, வேறஒருத்தரை நடிக்க வைக்கலாமேன்னு எங்களுக்குள்ள சிபாரிசு பண்ணிக்கிறதும் இல்லை.
'உன் தொழில்ல நான் தலையிட மாட் டேன்; என் வேலையில் நீயும் தலையிடக் கூடாது.' இதுதான் அவரோட பாலிசி. ஆனா, குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரைக்கும் காதலோட தொடங்கி, புரிதலோடதான் இப்போ வரைக்கும் வாழ்ந்துட்டு இருக்கோம். 'நீ எனக்காக மாறணும்.. நான் உனக்காக மாறுறேன்'ன்னு நாங்க ரெண்டுபேரும் எப் போதுமே சொல்லிக்கிட்டதே இல்ல. ஒரு விஷயம் எனக்குப் பிடிக்கலன்னா, அவரே புரிஞ்சுக்கிட்டு அதைத் தவிர்த்துடுவாரு
லைஃப்ல சின்னச் சின்ன பிரச்னைகள் வரத்தான் செய்யும். எங்களுக்கும் அது இருக்கு சில நேரங்களில் கருத்து வேறு பாடுகளும் வரும் ஆனா, மனசுவிட்டு பேசிக்கிட்டா வாழ்க்கை இன்னும் அழகாகிடும். எங்க வாழ்க்கையும் அப்படித்தான் இன்னைக்கும் அழகா போயிட்டு இருக்கு"
சினிமா, அரசியல்னு பிஸியாக இருந்ததால உங்க குழந்தைகளோட அதிக நேரம் இருக்க முடியலையேன்னு வருத்தப்பட்டிருக்கீங்களா?
"நான் கடந்த 12 வருஷங்கள்ல மொத்தமா 10 படங்கள் கூட நடிக்கல. என் பிள்ளைகளோடதான் அதிக நேரம் செலவழிச்சிருக்கேன். சின்னத்திரையில் பீஸியா இருந்தாலும், பெரும்பாலும் சென் னையில் தான் ஷூட்டிங் இருக்கும். அதனால எனக்கு அது பெரிய பிரச்னையா இருந்ததில்லை. பெரும்பாலும் என்னோட தயாரிப்பு நிறுவனம்தான் என்பதால், அதுக்கேத்த மாதிரி என்னோட நேரத்தை மாத்திக்குவேன். பிள்ளைகளை பள்ளியில் விட்டுட்டு காலை 10 மணிக்கு ஷூட்டிங்குக்குப் போய்ட்டு. மாலை 6 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துடுவேன். ஞாயிற்றுக்கிழமை ஷூட்டிங் வைக்கவே மாட்டேன்.
லீவ் இருக்கும்போது பிள்ளைகளைக் கூட்டிக்கிட்டு வெளியூர் போயிடுவோம். இப்படி பெரும்பாலான நேரம் அவங்களோடவே இருந்ததால, அவங்களுக்காக நேரம் ஒதுக்க முடியலையேன்னு எனக்கு எந்த வருத்தமும் இருந்ததே இல்லை."
குஷ்புன்னாவே பூசிய அழகான முகம் தான் நினைவுக்கு வரும். ஆனா ஏன் திடீர்னு உடல் எடையை குறைச்சிட்டீங்க?
“ஒருமுறை வெயிட் செக் பண்ணப்போ 96.6 கிலோ இருந்தேன். இன்னும் ஒன்றரை கிலோ இருந்தா செஞ்சுரியே போட்டிருப்பேன். சச்சின், டோனி எல்லாம் செஞ்சரி போடலாம். நான் போடலாமா?
படப்பிடிப்பின்போது பல முறை முட்டிக்காலில் அடிபட்டு சர்ஜரியும் நடந்திருந்தது. மாடிப்படிகளில் ஏறுவதுகூட சிரமமாக இருந்தது. டாக்டர்கிட்ட கேட்டப்போ, 'உடல் எடையைக் குறைக்கிறது தான் இதுக்கு ஒரே வழின்னு சொன்னார்.
எனக்கு பிபி, சுகர் எதுவும் இல்லை. அதெல்லாம் வர்ற வயசுதான். ஆனா, அது வராம தடுக்க என்னென்ன செய்யணுமோ, அதுக்கு தயாரா இருக்கணும்னு முடிவெடுத்தேன். 2021லிருந்து உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்தேன். இப்போ 40 கிலோ குறைச்சிருக்கேன். அதுக்காக குண்டா இருப்பது தப்புன்னு நான் சொல்லலை. நம்மோட உடல்நலம் நல்லா இருக்கணும்னா, சில முடிவுகளை நாமே கட்டாயம் எடுக்கணும். அதனால்தான் இந்த எடை குறைப்பு முயற்சி"
“சினிமா நட்சத்திரங்களில் கூட்டுக் குடும்ப கலாச்சாரம் அரிதானது. ஆனால் நீங்கள் அதற்கு மாறாக இன்னும் கூட்டுக் குடும்பத்தில் இருக்கிறீர்களே?
'ப்ளாட்ல இருந்து தனி விட்டுக்குப் போனதும், நானும் சுந்தர் சியும் சேர்ந்து எடுத்த முடிவுதான் இது. 'என்னோட அம்மா நம்மகூட இருப்பதுபோல, உன் அம்மாவும் நம்மகூடவே இருக்கட்டும்!"னு சுந்தர்.சி ஒருமுறை சொன்னார். அப்போதிருந்து நாங்க எல்லாரும் ஜாய்ண்ட் ஃபேமிலியாகத்தான் இருக்கோம். பெரியவங்களோட ஜாய்ண்ட் ஃபேமிலியா வாழ்றதை கடவுளோட ஆசீர்வாதமா பார்க்கிறேன். என் பிள்ளைகள் என் அம்மா, அத்தை ஆகியோருடன் நேரம் செலவழிப்பதைப் பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கும். என் அம்மாவும், அத்தையும் இப்போ 90 வயதைத் தாண்டிட் டாங்க எங்களை குழந்தைப் பருவத்தில் வளர்த்தவங்களை, இப்போகுழந்தைகள் மாதிரி நாங்க பார்த்துக்கிறோம். அதில் கிடைக்கிற சந்தோஷமே தனிதான்?
அரசியலில் கவனம் செலுத்துவதால்தான் சினிமாவில் அதிகம் பார்க்க முடிவ தில்லையா?
"நான் நடிக்கத் தயாராகத் தான் இருக் கேன். ஆனா, அது யாருக்கும் தெரியலன்னு நினைக்கிறேன். எனக்குன்னு தனியா மேனேஜர் யாரையும் வைக்கல. குழந்தை நட்சத்திரமாக நடிச்சு, அதுக்குப் பிறகு ஹீரோயினாக நடிக்கத் தொடங்குற காலகட்டத்துக்கு இடையில் ஒரு இடைவெளி வருமே... அதே மாதிரிதான் இப்போ என்னு டைய நிலையும் இருக்கு என்னால் நாயகியாக மட்டுமே நடிக்க முடியாது: அதே நேரத்தில் 'தாய்கிழவி' மாதிரியான கதாபாத்திரங்களிலும் நடிக்க முடியாது. ஒரு மாற்றத்துக்கான காலகட்டமாகத்தான் இதைப் பார்க்கிறேன்.
ஆனாலும், தெலுங்கில் நான்கு, ஐந்து படங்களுக்கு மேல் நடித்துக்கிட்டிருக்கேன். தமிழ்ல தான் எனக்கு ஏற்ற ஸ்கிரிப்ட்கள் வரவில்லை."
முதல்வர் விஜய்யை சமீபத்தில் சந்திக்கும் போது உங்கள் இளைய மகள் மயக்கம் போட்டு விழுந்தது வைரலானதே?
'சின்ன வயசுல இருந்தே அவள் விஜய்யோட பிக் ஃபேன். அவரோட படம் ரிலீஸ் ஆகுற அன்னைக்கு அவங்க தரப்பில் இருந்து அனுப்பும் டிஷர்ட் போட்டுக்கிட்டு முதல் ஷோ பார்க்கப் போயிடுவாங்க. இப்போ 'ஜனநாயகன்' ரிலீஸ் சமயத்தில் டெல்லி போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் ரொம்ப அப்செட் ஆகிட்டாங்க பிறகு பயணத்தை மாற்றி படம் பார்க்கிற மாதிரி சூழல் அமைந்தது.
அவரை நேரில் பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டு ட்டாங்க. அதுக்குப் பிறகு வெளியே வந்து தேம்பித் தேம்பி அழுதாங்க ரஜினிக்கு அடுத்ததாக விஜய்க்கு இருக்கும் ரசிகர் பட்டாளத்தை நாங்கள் மிகப் பெரிய விஷயமாக பார்க்கிறோம்." இப்போதும் சினிமாவில் காஸ்டிங் கவுச் (Casting Couch] இருப்பதாக விமர் சனம் இருந்து வருவதை அந்த துறை சார்ந்த நபராக எப்படி பார்க்கிறீர்கள்?
"குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சினிமாவில்தான் நான் வளர்ந்தேன். கிட்டத்தட்ட 45 வருஷங்களாக நடித்து வருகிறேன். இத்தனை ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு சூழ்நிலைக்கு நான் ஆளானதில்லை.
ஒரே ஒரு முறை, ஒரு ஆர்டிஸ்ட் அப்படி கேட்டபோது, காலணியின் சைஸை குறிப்பிட்டு அதை எடுத்துக் காட்டி, 'இங்கே கேரவன்ல அடிக்கவா? இல்லை வெளியே படக்குழுவினர் முன்னாடி அடிக்கவா? ன்னு கேட்டேன்.
நம் கையில் எல்லா உரிமையும் இருக்கிறது. நமக்கான முடிவை தெளிவாகவும், உறுதியாகவும் எடுத்தால் போதும்!" என்றார்.