திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று 141 பயணிகளை ஏற்றிக்கொண்டு மாலை 5.40 மணிக்கு ஷார்ஜா நோக்கி புறப்பட்டது. விமானம் மேலே எழும்பியதும், இயந்திரக் கோளாறு காரணமாக அதன் சக்கரங்கள் உள்ளே செல்லாமல் சிக்கிக் கொண்டன.
இதனால் விமானத்தை திருச்சி விமான நிலையத்திலேயே தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக விமானம் சுமார் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக வானத்திலேயே வட்டமடித்து கொண்டு இருந்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள், 4 தீயணைப்பு வாகனங்களும் திருச்சி விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்தன.
இதனையடுத்து விமானத்தின் எரிபொருள் தீரும் வரை வானில் வட்டமடித்த விமானம், இரவு 8.15 மணிக்கு பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இந்நிலையில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இதனிடையே, விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கிய விமானிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உதவிகளை வழங்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.