ADMK Meeting 2024 : திமுகவை கண்டித்து அதிமுக செயற்குழுவில் தீர்மானம்... எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம்!
ADMK Meeting 2024 : பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக அவசர செயற்குழு கூட்டம் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் தற்போது நடைபெற்றது. இக்கூட்டத்தில், திமுக அரசுக்கு கண்டனம் உள்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ADMK Meeting 2024 : சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்கச் சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பின்னர் தொடங்கிய செயற்குழு கூட்டத்தில் திமுகவைக் கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதேபோல், 2026 சட்டமன்றத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி எடுக்கும் முடிவுக்கு அனைவரும் அரணாக இருப்போம் எனவும் செயற்குழுவில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அதன்படி, முதலில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த வக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், தேர்தல் பணிகளில் பணியாற்றிய அதிமுக நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள், கூட்டணி கட்சியினர் ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்தத் தேர்தல் பணிகளில் அயராது உழைத்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இரண்டாவதாக நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்க முடியாத திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விலையில்லா வேட்டி, சேலை வழங்குவதிலும், விலையில்லா பள்ளிச் சீருடைகள் வழங்குவதிலும் மெத்தனப்போக்கோடு இருப்பதாக திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல், மக்கள் நலன் கருதி மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும், மாதாந்திர மின் கணக்கீட்டு முறையை அமல்படுத்தவும் திமுக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நான்காவதாக தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைகளைக் காப்பாற்றத் தவறிய விடியா திமுக அரசின் மெத்தனப் போக்கிற்கு கடும் கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐந்தாவதாக, மக்கள் நலன் கருதி, அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வந்த உன்னதமான பல திட்டங்களை, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முடங்கி செயலிழக்கச் செய்துள்ளதாக திமுக அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், ஆறாவதாக, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசுக்கு எதிராகவும், மீனவர்களின் நலனில் அக்கறை செலுத்தாத மாநில திமுக அரசு, மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஏழாவதாக, மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்குத் தேவையான திட்டங்களை அறிவிக்காததற்கும், போதுமான நிதியை ஒதுக்காததற்கும் மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல், மருத்துவக் காப்பீடு பிரீமியத்திற்கு 18% ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தியும், வயநாடு நிலச்சரிவை, தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதிமுக செயற்குழு கூட்டம் - தீர்மானம் நிறைவேற்றம்..!#kumudamnews24x7 | #kumudam |#kumudamnews | #admk | @AIADMKITWINGOFL | @AIADMKOfficial | @EPSTamilNadu | @Admkitwing | @djayakumaroffcl | #meeting | #TodayNews | pic.twitter.com/fieVV4dA8Q — KumudamNews (@kumudamNews24x7) August 16, 2024
எட்டாவதாக, தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலை, தொழில் வளர்ச்சி குன்றியதற்கான காரணங்களை அறிந்து அவற்றை சரிவர நிவர்த்தி செய்யாத போன்ற காரணங்களுக்கு கண்டனம் தெரிவித்தும் திமுக அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், நிர்வாகத் திறன் இல்லாமல் கடன் மேல் கடன் வாங்கி, வரி மேல் வரி விதித்து மக்களை கடனாளியாக்கியது திமுக அரசு தான் என குற்றம்சாட்டியுள்ள அதிமுக, மூன்றாண்டு கால திமுக ஆட்சி சாதனை அல்ல வேதனையே எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இறுதியாக 2026 சட்டமன்றத் தேர்தலில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எடுக்கும் முடிவுக்கு அனைவரும் அறனாக இருப்போம் எனவும் இன்றைய அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?