அரசியல்

அடுத்த ஆட்டத்துக்கு ரெடியாகும் விஜய்.. 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம்.. அவசர ஆலோசனை

தமிழக வெற்றிக் கழக மாநாடு குறித்தும், 234 தொகுதிகளிலும் மேற்கொள்ளவுள்ள சுற்றுப்பயணம் குறித்தும் நடிகர் விஜய் அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

அடுத்த ஆட்டத்துக்கு ரெடியாகும் விஜய்.. 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம்.. அவசர ஆலோசனை
234 தொகுதிகளிலும் மேற்கொள்ளவுள்ள சுற்றுப்பயணம் குறித்தும் நடிகர் விஜய் அவசர ஆலோசனை

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் ஆரம்பம் முதலே ஆவேசமாக பேசத் தொடங்கிய விஜய், கூட்டணி பற்றியும் வெளிப்படையாக அறிவித்தார்.

அதன்படி, அரசியல் பயணத்தில் நம்மை நம்பி வருபவர்களையும் நாம் அன்போடு வரவேற்க வேண்டும். அப்படி வருபவர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் சமமான அதிகாரப் பங்கு கொடுக்கப்படும் என்றார். அதேநேரம், மாநில ஆளுங்கட்சியான திமுக, மத்தியில் ஆட்சி செய்துவரும் பாஜக உட்பட மேலும் சில கட்சிகளையும் விஜய் சரமாரியாக தாக்கிப் பேசினார். திராவிட மாடல் ஆட்சி என மக்களை ஏமாற்றுவதாக திமுகவையும், பாஜகவின் பிளவுவாத அரசியலையும் கடுமையாக சாடியிருந்தார்.

முக்கியமாக கூட்டணி குறித்து விஜய் பேசியது தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் விசிக தலைவர் திருமாவளவன் பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலானது. அதில், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதே விசிகவின் நிலைப்பாடு என்பதாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் அரசியல் மாநாடு குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, விஜய்யின் அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார். அதேநேரம், திமுக உள்ளிட்ட ஆளும்கட்சி கூட்டணிக் கட்சிகள் விஜய்யின் மாநாடு குறித்து எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். மாநாட்டுக்கு முன்பு வரை விஜய்யை தனது தம்பி என உரிமையோடு கொண்டாடிய சீமான், தற்போது தவெக கொள்கை தங்களுக்கு ஒத்துவராது என அதிரடியாக தெரிவித்தார்.

மாநாடு முடிவடைந்த நிலையில், விஜய் விரைவில் தமிழகம் முழுவதும் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க திட்டமிட்டு உள்ளார். மாநாட்டில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு புதிய பொறுப்புகளையும் வழங்க இருக்கிறார். அதன்படி மாவட்ட, வட்ட, ஒன்றிய, கிளை வரை செயலாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.

நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பிறகு, அடுத்த மாதம் டிசம்பர் 27ஆம் தேதி முதல் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்ய விஜய் திட்டமிட்டு உள்ளார். இதற்கான பயண விவர தயாரிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கோவையில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்கி, நெல்லையில் முடிக்கவும் திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் தலைமையில் முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக வெற்றிக் கழக மாநாடு குறித்தும், 234 தொகுதிகளிலும் மேற்கொள்ள சுற்றுப்பயணம் குறித்தும், அவசர ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட உள்ளனர்.