தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் பென் டிரைவ் மூலம் குற்றப்பத்திரிக்கை - 27 பேரும் வாங்க மறுப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 27 பேருக்கு வருகிற 14ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் பென் டிரைவ் மூலம் குற்றப்பத்திரிக்கை - 27 பேரும் வாங்க மறுப்பு
குற்றப்பத்திரிக்கை நகலை வழங்குவதில் காலதாமதம் ஆவதால் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 28 நபர்களை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அதில் ஒருவர் என்கவுண்டர் செய்யப்பட்டு தலைமறைவாக உள்ள இரண்டு நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இவ்வழக்கு தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஐந்தாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். இந்த குற்ற பத்திரிக்கை நகலை வழங்குவதற்காக கடந்த வாரம் ரவுடி நாகேந்திரனை தவிர மற்ற 26 பேரை எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர்.

அப்போது போலீசார் குற்றப்பத்திரிக்கை நகலை பென் டிரைவில் வழங்க இருந்த நிலையில், அதனை குற்றவாளிகள் தரப்பு வாங்க மறுத்தனர். இதனால் வழக்கை ஒத்தி வைத்தார்.

இந்நிலையில் இன்று ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது செய்யப்பட்ட 27 நபர்களையும் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக எழும்பூர் நீதிமன்ற மேஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்தினர். மீண்டும் குற்றப்பத்திரிக்கை நகலை பென் டிரைவ் மூலமாக வாங்க மறுத்ததால் வருகிற 14-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டிப்பு செய்து எழும்பூர் மேஜிஸ்ட்ரேட் உத்தரவு பிறப்பித்தார்.

குற்ற பத்திரிக்கை நகலை பெறுவதில் தொடர்ச்சியாக சிக்கல் நீடித்து வருகிறது. குறிப்பாக ஐந்தாயிரம் பக்கங்கள் கொண்ட நகலை பென்டிரைவ் மூலமாக போலீசார் ஏற்றி கொடுப்பதால் சிறைக்குள் எலக்ட்ரானிக் பொருட்கள் அனுமதி இல்லை எனவும் குற்றவாளிகள் நகலை படிக்க முடியாது எனவும் குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடுகின்றனர். இதனால் பேப்பர் மூலமாக குற்றப்பத்திரிக்கை நகலை வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதற்கு பி.என்.எஸ் சட்டத்தின் படி குற்றப்பத்திரிக்கை நகலை பென்டிரைவ் மூலமாக வழங்கலாம் எனவும் ஐந்தாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை 28 நபர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றால் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேப்பர்கள் தேவைப்படுவதாகவும் அதற்கு செலவாக 3 லட்சம் ரூபாய் வரை ஆக வாய்ப்பிருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குற்றப்பத்திரிக்கை நகலை வழங்குவதில் காலதாமதம் ஆவதால் வருகிற 14-ஆம் தேதி இதற்கு முடிவு எட்டப்படும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.