தொடை இடுக்குகளில் தேமல் போன்று உருவாகி அரிப்பு ஏற்படும். இந்தப் பிரச்னையை நம்மில் பலரும் எதிர்கொண்டிருப்போம். இதுதான் படர்தாமரை. இதற்கான மருத்துவப் பூர்வமான தீர்வு என்ன என்பது குறித்து விரிவாக விளக்குகிறார் சரும நோய் மருத்துவர் வானதி திருநாவுக்கரசு...
‘‘படர்தாமரை பலரும் ஆட்படுகிற முக்கியமான சருமநலப் பிரச்னை ஆகும். நமது உடலில் அக்குழ், முகம், கை, கால், காது, புட்டம் ஆகிய உறுப்புகளில் தோல் உராயும் பகுதிகளில் படர்தாமரை ஏற்படுகிறது. இது ஒரு விதமான பூஞ்சைத்தொற்று ஆகும். இது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குத் தொற்றுவதற்கான வாய்ப்புகள் பெரிதளவில் இருக்கின்றன. தொற்றும் அபாயம் இருப்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிலருக்கு விரல் நகங்களில் பூஞ்சைகள் இருக்கலாம். சொறியும்போது அப்பூஞ்சைகள் தோலில் தொற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருக்கின்றன. அரிதாக மண்ணிலிருந்தும், விலங்குகளிடமிருந்தும் கூட பூஞ்சைத் தொற்று ஏற்படும்.
பெண்கள் சானிட்டரி நாப்கின் பயன்படுத்துவதால் அதன் காரணமாக தொடை இடுக்குகளில் இப்பிரச்னை ஏற்படுவதாக நினைக்கின்றனர். உண்மையில் சானிட்டரி நாப்கின் பயன்பாடு காரணமாக இப்பிரச்னை ஏற்படாது. அதே நேரம் காட்டன் அல்லாத வேறு மெட்டீரியலால் ஆன சானிட்டரி நாப்கின் பயன்படுத்தும்போது அது இப்பிரச்னையை அதிகப்படுத்தும் வாய்ப்பிருக்கிறது. ஆகவே காட்டன் நாப்கின்களைப் பயன்படுத்துவதுதான் உகந்தது.
படர்தாமரைக்கென தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்தப்படும் க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் ஒவ்வொருவரது சருமத்தின் தன்மையும் வேறானது. உங்கள் சருமம் மிகவும் சென்சிட்டிவாக இருக்குமேயானால் மருத்துவரிடம் ஆலோசனை பெறும்போது அவர் அதற்கேற்ற அளவிலான மருந்துகளைப் பரிந்துரைப்பார். இது போன்று பொதுவாக விற்கப்படும் க்ரீம்களில் மூலக்கூறுகளின் அளவு முறைப்படுத்தப்பட்டதாக இருக்காது என்பதால் அது எரிச்சலை மேலும் அதிகப்படுத்தும். சிலர் கை வைத்தியம் என எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து தேய்ப்பார்கள். அதுவும் தவறுதான். மருத்துவ ஆலோசனையின் பேரில் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளையே பயன்படுத்த வேண்டும். இப்பிரச்னையைப் பொருத்தவரை rule of two விதியைப் பின்பற்ற வேண்டும். இரண்டு வேளை குளித்து, இரண்டு வேளை மருந்து போட வேண்டும். படர்தாமரை சரியாகிய பின்னும் இரண்டு வாரத்துக்கு மருந்து தடவ வேண்டும். காட்டன் உள்ளாடைகளை பயன்படுத்துவதே சாலச் சிறந்தது.’’ என்கிறார் வானதி.