மீட்புப் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன் - முதலமைச்சர் ஸ்டாலின்
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் ரயில் விபத்து நடந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தேன் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மைசூரில் இருந்து சென்னை வழியே பீகார் செல்லும் தர்பாங்கா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று (அக். 11) இரவு பெரம்பூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 7.30 மணி அளவில் புறப்பட்டு பீகார் நோக்கி சென்று கொண்டிருந்தது. 22 பெட்டிகளைக் கொண்ட இந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்யும் பெட்டிகளில் சுமார் 1300க்கும் மேற்பட்ட பயணிகளும், முன்பதிவு இல்லாத இரண்டு பெட்டிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட பயணிகள் என 1500க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர். பொன்னேரி ரயில் நிலையத்தை கடந்து கவரைப்பேட்டை ரயில் நிலையம் நெருங்கும்போது திடீரென இந்த எக்ஸ்பிரஸ் ரயில் முன்னால் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயங்கரமாக மோதியது.
ஆந்திரா செல்லும் மார்க்கத்தில் பிரதான தண்டவாளத்தில் வருவதற்காக சிக்னல் கொடுக்கப்பட்டிருந்த சூழலில் பிரதான தண்டவாளத்தை தவிர்த்து அருகில் இருக்கக்கூடிய லூப்லைன் எனும் தண்டவாளத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மணிக்கு 75 கிமீ வேகத்தில் வந்து முன்னால் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த இன்ஜின் மற்றும் 13 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இதில் எக்ஸ்பிரஸ் ரயிலின் சரக்குகளை ஏற்றி செல்லும் முதல் பெட்டி தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. மூன்று பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து வெளியே வந்து கவிழ்ந்தன. விபத்தினால் அதிர்ச்சியடைந்த ரயில் பயணிகள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அலறி அடித்தபடி இறங்கி தலைதெறிக்க ஓடினர். விபத்து குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் ரயில் விபத்து நடந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். தகவல் கிடைக்கப்பெற்றவுடன், அமைச்சர் நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளையும் விபத்து நடந்த இடத்திற்குச் செல்ல உத்தரவிட்டேன்.
மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் அரசு துரிதமாகச் செயல்பட்டு வருகிறது. இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். மற்ற பயணிகளுக்குத் தேவையான உணவு, அவர்கள் ஊர் திரும்புவதற்கான பயண வசதிகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்வதற்கெனத் தனியே ஒரு குழு இயங்கிக் கொண்டிருக்கிறது. விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகளை அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மீட்புப் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன்” என தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
What's Your Reaction?