33% ஆட்சியில் தானா? கட்சியில் இல்லையா? 1 பெண், 1 தலித் மா.செக்கள் திமுகவின் சமூகநீதி இதுதானா?

2026 சட்டமன்ற தேர்தலுக்காக திமுக தயாராகிவரும் நிலையில், மா.செக்கள் மாற்றம் மற்றும் மா.செக்கள் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகிய முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், சமூகநீதி பேசும் திமுகவில் பெண் மா.செக்கள் மற்றும் தலித் மா.செக்கள் எண்ணிக்கை என்ன என்பது குறித்து தெரியுமா? இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்

Aug 20, 2024 - 20:23
Aug 21, 2024 - 15:46
 0
33% ஆட்சியில் தானா? கட்சியில் இல்லையா? 1 பெண், 1 தலித் மா.செக்கள் திமுகவின் சமூகநீதி இதுதானா?

திமுகவை பொறுத்தவரை மாவட்டச் செயலாளர் பதவி என்பது அந்த மாவட்டத்தின் முதலமைச்சர் போன்றது. மிகவும் பவுர்ஃபுல்லான இந்த மாவட்ட செயலாளர் பதவிக்கு என்றுமே கடும்போட்டி நிலவிவரும். இதுவரை அமைப்பு ரீதியாக 72 மாவட்டங்களை திமுக பிரித்து மாவட்டச் செயலாளர்களையும் உருவாக்கியுள்ளது. மாவட்டச் செயலாளர்களாக உள்ள அமைச்சர்களுக்கு 5 சட்டமன்ற தொகுதிகளும், மற்ற மாவட்டச் செயலாளர்களுக்கு 3 சட்டமன்ற தொகுதிகளும் உள்ளடக்கிய மாவட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் பெரிய பெரிய சட்டமன்றத் தொகுதிகளை சமாளிப்பதில் சிக்கல் நீடிப்பதாலும், இளைஞர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கபட வேண்டும் என்பதாலும், அமைப்பு ரீதியாக மாவட்டங்களை அதிகரிக்க திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதனடிப்படையில் 117 மாவட்டங்கள் அமைப்பு ரீதியாக உருவாக்கப்பட்டு, இதில் 80க்கும் மேற்பட்ட மா.செக்கள் இளைஞரணியில் இருந்து தேர்வாகலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில், திமுகமீது கடுமையான விமர்சனம் ஒன்று முன்வைக்கப்பட்டு வருகிறது. சமூகநீதி பேசும் திமுக, மாவட்டச் செயலாளர் பதவியை பெண்களுக்கு கொடுக்க மறுப்பது ஏன் என்றும், தலித்துகளை சமூகநீதி திமுக புறக்கணிப்பதாகவும் கட்சிக்குள் ஒரு பூகம்பமே வெடித்துள்ளதாக அறிவாலய வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

பெண் மாவட்டச் செயலாளர்களை பொறுத்தவரை, திமுகவில் இதுவரை 4 பெண் மாவட்டச் செயலாளர்கள் இருந்துள்ளனர். திமுகவின் முதல் மாவட்டச் செயலாளராக இருந்தவர் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் மனைவியான விஜயலட்சுமி பழனிசாமி. கோவையில் மிகவும் தீவிரமாக அதிமுகவை எதிர்த்து அரசியல் செய்து வந்த இவர், 2004ல் காலமானார். 

அவரைபோலவே, கரூர் மாவட்டச் செயலாளராக இருந்த வாசுகி முருகேசன், அதிமுகவில் செந்தில்பாலாஜி இருந்த சமயத்தில் அவரை திணறடிக்கும் அளவிற்கு அரசியலில் இறங்கி வேலை செய்து வந்தார். செம்ம போல்ட்டான, அரசியலில் தீவிரம் காட்டிய அவரும் 2009ல் காலமானார்.

ஆண் நிர்வாகிகளுக்கு நிகராக டஃப் கொடுத்துவந்த கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளராக இருந்த அங்கயற்கண்ணிக்கு ப்ரோமோஷன் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது திமுகவின் ஒரே பெண் மாவட்டச் செயலாளராக இருந்துவருகிறார் கீதா ஜீவன். சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சராக உள்ள கீதா ஜீவன், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார். 

https://www.youtube.com/watch?v=Ydllp3Fddy0

2006 - 2011 கலைஞர் தலைமையில் திமுகவில் 2 பெண் மாவட்டச் செயலாளர்கள் இருந்த நிலையில், ஸ்டாலின் தலைமையில் வெறும் ஒரே ஒரு பெண் மாவட்டச்  செயலாளர் தான் இருக்கிறார். குறிப்பாக ஸ்டாலின் ஆட்சியில் பெண்களுக்கான சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், அதெல்லாம் வெறும் ஆட்சியை காக்கத்தானா? கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாதா? என்ற கேள்விகளை அரசியல் விமர்சகர்கள் முன்வைத்து வருகின்றனர். 

33 சதவிகிதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு வாங்கிக் கொடுத்ததாக பெருமை பேசிக் கொள்ளும் திமுகவில் பெண் மாசெக்களின் எண்ணிக்கை வெறும் 1.3 சதவிகிதம் தான். இதனால் திமுகவில் பெண்களுக்கான இடஒதுக்கீடு என்பது விழிம்புநிலையில் உள்ளது என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதோடு, மாவட்டச் செயலாளர்கள் பதவி என்பது ஆண்களுக்கானது மட்டும் தானா? பெண்கள் அதற்கு தகுதியானவர்கள் இல்லையா? என்ற கேள்விகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பண பலம், ஆள் பலம் என இருந்தாலும், ரோட்டில் இறங்கி பெண்கள் சண்டை செய்தால்தான் அவர்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவியை திமுக தலைமை வழங்குமா என்று கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

பெண்களுக்கு மட்டுமல்ல, சாதி ஒழிப்பு குறித்து பேசும் திமுகவில் ஆதிக்க பிரிவைச் சேர்ந்தவர்களுக்கே அதிக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. திமுகவில் இருக்கும் 72 மாவட்டச் செயலாளர்களில் வெறும் ஒரே ஒரு தலித் மாவட்டச் செயலாளர் தான் இருக்கிறார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சராக உள்ள சி.வி.கணேசன், கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளராக நீடித்து வருகிறார். 

வெறும் ஒரே ஒரு தலித், ஒரு பெண் மாவட்டச் செயலாளரை கொண்டுள்ள திமுகவில், தேவர், நாயுடு, கவுண்டர், வன்னியர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது…  இதுதான் திமுக பேசும் சமூகநீதியா? என்று அரசியல் விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

திமுகவில் மட்டுமல்ல, அதிமுக, விசிக போன்ற மாநில கட்சிகளிலும் பெண் மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கை என்பது குறைவாகவே உள்ளது. பெண்களுக்கான 33 சதவிகிதம், பிற்படுத்தப்பட்டோருக்கான 18 சதவிகிதம் குறித்தெல்லாம் பேசும் சமூகநீதி திமுக மற்றும் பிற மாநில கட்சிகள், இதுகுறித்து விரைவில் ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow