Devanathan Fraud Case : தேவநாதனை கையோடு கூட்டிச்சென்று அலுவலகத்தில் சோதனை.. 2 கிலோ தங்கம், 33 கிலோ வெள்ளி பறிமுதல்..

Gold Silver Seized in Devanathan Financial Fraud Case : சென்னை மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தேவநாதனின் அலுவலகத்தில் இருந்து 2 கிலோ தங்கம், 30 கிலோ வெள்ளிப் பொருட்களை குற்றப்பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Aug 31, 2024 - 13:55
Aug 31, 2024 - 17:15
 0
Devanathan Fraud Case : தேவநாதனை கையோடு கூட்டிச்சென்று அலுவலகத்தில் சோதனை.. 2 கிலோ தங்கம், 33 கிலோ வெள்ளி பறிமுதல்..
தேவநாதன் அலுவலகத்தில் தங்கம், வெள்ளி மற்றும் ஆவணங்கள் பறிமுதல்

Gold Silver Seized in Devanathan Financial Fraud Case : சென்னை மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தேவநாதனின் அலுவலகத்தில் இருந்து 2 கிலோ தங்கம், 30 கிலோ வெள்ளிப் பொருட்களை குற்றப்பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

சென்னை, மயிலாப்பூர் தெற்கு மாடவீதியில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக ‘மயிலாப்பூர் ஹிந்து பெர்மனன்ட் ஃபண்ட்’ எனும் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தின் தலைவராக இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தனியார் தொலைக்காட்சி நிறுவனருமான தேவநாதன் யாதவ் பொறுப்பு வகித்து வந்தார்.

இந்த நிதி நிறுவனத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு தொகை உறுப்பினர்களாக உள்ளனர். இதில் பெரும்பாலும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் முதியவர்கள் தங்களது ஓய்வூதிய பணத்தை அதிகளவில் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிதி நிறுவனம் முதலீடு செய்யும் பணத்திற்கு 10 முதல் 11 சதவீதம் வரை வட்டி அளிப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த மோசடி தொடர்பாக கடந்த ஜூன் மாதம் 6ஆம் தேதி அந்த நிறுவனத்திற்கு முன்பாக 50க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், கடந்த 13ஆம் தேதி திருச்சியில் தேவநாதன் யாதவை கைது செய்தனர்.

இதனையடுத்து, நிதி நிறுவன மோசடி தொடர்பாக தேவநாதன் தொடர்புடைய 11 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் 4 லட்சம் பணம், இரண்டு கார்கள், ஹார்ட் டிஸ்க்கள் மற்றும் சில முக்கிய ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், கடந்த 18ஆம் தேதி சென்னை மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவனம், தி.நகரில் உள்ள தேவநாதனின் வீடு, குற்றத்திற்கு உடந்தையாக இருந்த நபர்களின் வீடுகள் என 12 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில் நிதி நிறுவனம் மற்றும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சீல் வைத்தனர். மேலும், தேவநாதன் பெயரில் உள்ள 5 வங்கிக் கணக்குகள் மற்றும் நிதி நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்தனர்.

இந்த வழக்கில் ஏழு நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. இந்த நிலையில் 5 நாட்கள் போலீஸ் காவல் நிறைவடைய உள்ள நிலையில் நிதி நிறுவன மோசடி தொடர்பாக தேவநாதனை அவரது அலுவலகத்திற்கு அழைத்து வந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் நிதி நிறுவனத்தின் உரிமையாளரான தேவநாதனுக்கு சொந்தமான அலுவலகத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 2 கிலோ தங்கம் மற்றும் 30 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் நிலம் தொடர்பான ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow