தமிழ்நாடு

மனோ மகன்கள் சரமாரியாக தாக்கிய வழக்கு.. காவல்துறை அதிரடி நடவடிக்கை

பாடகர் மனோவின் மகன்களை தாக்கிய வழக்கில் மனோவின் மனைவி ஜமீலா அளித்த புகாரின் அடிப்படையில் இரண்டு நபர்கள் கைது செய்துள்ளனர்.

மனோ மகன்கள் சரமாரியாக தாக்கிய வழக்கு.. காவல்துறை அதிரடி நடவடிக்கை
பாடகர் மனோ மற்றும் மகன்கள் சாஹிர், ரஃபி

பாடகர் மனோவின் மகன்களான ரபிக் மற்றும் சாகிர் ஆகியோரை தாக்கிய வழக்கில் கிருபாகரன் (20), 16 வயதுடைய இளஞ்சிறார் ஒருவர் என இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை வளசரவாக்கத்தில் கடந்த 11ஆம் தேதி பிரபல பாடகர் மனோவின் மகன்களான ஷகீர், ரபீக் ஆகியோர் மதுபோதையில்  நண்பர்களுடன் சேர்ந்து சிறுவன் உள்பட இருவரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. சம்பவம் நடந்த போது போலீசார் அங்கிருந்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தாக்குதலுக்கு உள்ளான இளைஞர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மனோவின் மகன்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், தலைமறைவாகியுள்ள மனோவின் மகன்கள் இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இதற்கிடையில், தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியது. அந்த வீடியோவில், மனோவின் மகன்கள் இருவரையும், இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் கல், கட்டை உள்ளிட்டவற்றால் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து, தன் மகன்கள் மீதும், தன் மீதும் 10க்கும் மேற்பட்டோர்கள் தாக்குதல் நடத்தியதாக பாடகர் மனோவின் மனைவி ஜமீலா 11ஆம் தேதி மாலை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேலும், தங்களது வீட்டுக்குள் அத்துமீறி 8 நபர்கள் நுழைந்து தன்னையும் தனது மகன்களையும் தாக்கி ரூபாய் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் பணம் மற்றும் 12 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றதாக பாடகர் மனோவின் மனைவி ஜமீலா அளித்த புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் பாடகர் மனோவின் மகன்கள் இருவரும் நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்றனர். மேலும், மனோவின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், எட்டு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், மனோவின் மகன்களின் நண்பர்களான விக்னேஷ் மற்றும், தர்மா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கிருபாகரன் மற்றும் 16 வயது இளஞ்சிறார் ஆகிய இருவரை வளசரவாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர் மீதமுள்ள ஆறு நபர்களை தேடி வருகின்றனர்.