சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க இன்று இரவு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார். சுமார் 17 நாட்கள் அமெரிக்காவில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின், செப்டம்பர் 12ம் தேதி தமிழ்நாடு திரும்புகிறார்.
முன்னதாக, காரில் சென்னை விமான நிலையம் வந்த முதல்வர் ஸ்டாலினை, அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்களும், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் உற்சாகமாக வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ''எனது வெளிநாட்டு பயணம் காரணமாக இதுவரை 772 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.9.99 லட்சம் கோடி ஆகும்.
இதன்மூலம் 18.89 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதேபோல் மற்ற ஒப்பந்தங்களும் படிப்படியாக செயல்பாட்டுக்கு வரும். முதலீடுகளை ஈர்ப்பதற்காக நான் கடந்த காலங்களில் வெளிநாட்டு பயணங்கள் காரணமாக பல நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. சில நிறுவனங்கள் செயல்பாட்டில் உள்ளன. தமிழ்நாட்டை 2030க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றக்கூடிய நமது இலக்கை விரைவில் எட்டுவோம்'' என்று கூறினார்.
அப்போது முதல்வர் ஸ்டாலினிடம், 'நீங்கள் அமெரிக்கா சென்று வந்த பிறகு தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா?'' என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த முதல்வர், ''மாற்றம் ஒன்றுதான் மாறாதது. Wait And See'' என்று கூலாக கூறினார்.
முதல்வர் ஸ்டாலின் சுமார் 17 நாட்கள் அமெரிக்காவில் இருப்பதால், அவர் வெளிநாடு செல்வதற்கு முன்பாக தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன. அதாவது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக நியமனம் செய்யப்படலாம் எனவும் 3 சீனியர் அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டு 3 புதிய முகங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வேகமாக பரவின.
ஆனால் அமைச்சரவையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. முதல்வர் ஸ்டாலினும் வெளிநாடு புறப்பட்டு சென்று விட்டார். தற்போது அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு Wait And See என்று முதல்வர் பதில் அளித்துள்ளதால், அவர் அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் அமைச்சரவையில் அதிரடி மாற்றம் இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.