TVK Maanadu : தவெக மாநாடு... 17 நிபந்தனைகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்... லிஸ்ட் போட்ட போலீஸார்!
TVK Maanadu : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக போலீஸார் தரப்பில் 33 நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது. இதில் 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
TVK Maanadu : கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய், சினிமாவை தொடர்ந்து அரசியலிலும் தடம் பதிக்கிறார். இதற்காக தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய விஜய், அடுத்தடுத்து கொடி அறிமுகம், கழகத்தின் பாடல் வெளியீடு என அதிரடி காட்டினார். அதன் தொடர்ச்சியாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடத்துவதற்காக ரெடியாகி வருகிறார் விஜய். கோட் படத்தின் ரிலீஸுக்கு எந்த சிக்கலும் வரக் கூடாது என காத்திருந்த அவர், செப்டம்பர் 23ம் தேதி மாநாடு நடத்தலாம் என முடிவு செய்திருந்தார். ஆனால், போலீஸார் தரப்பில் இருந்து அனுமதி கிடைக்காததால், மாநாடு தேதி அக்டோபர் 27ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதியை விழுப்புரம் மாவட்ட காவல்துறை வழங்கியது. முன்னதாக தவெகவுக்கு 16 கேள்விகள் கேட்டிருந்த போலீஸார், மாநாடு நடக்க வேண்டும் என்றால் 33 நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தனர். இந்த 33 நிபந்தனைகளில் 17 நிபந்தனைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். முன்னதாக புதிய மாநாட்டு தேதிக்கும் போலீஸார் தரப்பில் அனுமதி கொடுக்கப்படவில்லை என சொல்லப்பட்டது. இதனையடுத்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் விளக்கம் கொடுத்திருந்தார்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக மாநாடு அக்டோபர் 27ம் தேதி நடத்துவதற்கு, 33 நிபந்தனைகளில் கட்டாயம் 17 நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டுமென விக்கிரவாண்டி டிஎஸ்பி நந்தகுமார் தெரிவித்துள்ளார். அதன்படி மாநாடு நடைபெறும் நாள் அன்று போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் பார்க்கிங் செய்ய அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும், சாலைகளின் ஓரத்தில் போக்குவ்ரத்திற்கு இடையூறாக நிறுத்தக் கூடாது. கர்ப்பிணி பெண்கள், முதியவர்களுக்கு கட்டாயம் தடுப்புடன் கூடிய இருக்கை வசதிகள் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். மருத்துவ வசதியுடன் ஆம்புலன்ஸ், தீயனைப்பு வாகனங்கள் ஆகியவை மாநாட்டுத் திடலில் நிறுத்த வேண்டும். குடிநீர் வசதி, கழிவறை வசதி, உணவு ஆகியவை அனைத்தும் சுகாதாரமான முறையில் வழங்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.
அதேபோல் பேனர், வளைவுகள் போன்றவற்றை போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக தேசிய நெடுஞ்சாலைகளில் வைக்கக் கூடாது. தவெக தலைவர் விஜய் மாநாட்டிற்கு வரக்கூடிய வழிகளில் தடுப்புகள் அமைத்திருக்க வேண்டும். மாநாடு திடலில் எல் இடி திரைகள், சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். திறந்தவெளி கிணறுகள் மூடப்பட்டிருக்க வேண்டும் உள்ளிட்ட 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க டிஎஸ்பி நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல் தவெக சார்பிலும் அக்கட்சியின் தொண்டர்களுக்கு சில முக்கியமான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதில், தொண்டர்கள், நிர்வாகிகள் யாரும் மது அருந்திவிட்டு மாநாட்டில் பங்கேற்கக் கூடாது. பெண்களுக்கும் பெண் போலீஸாருக்கும் பாதுகாப்பும் மரியாதையும் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இது என்பதால், எந்தவித பிரச்சினைகளும் வரக் கூடாது என்பதில் தலைவர் விஜய்யும் அதிக கவனத்துடன் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?